ரஷ்யா உக்ரைன் போர்: வாக்னர் ராணுவ தளபதி மாற்றமா?

ரஷ்யா உக்ரைன் போர்: வாக்னர் ராணுவ தளபதி மாற்றமா?
Published on

க்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் சார்பில் சண்டையிடும் வாக்னர் கூலி இராணுவப் படையின் தளபதி பிரிகோசின் மாற்றப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய அதிபர் புட்டினின் முன்னாள் சமையல்காரரான பிரிகோசின் தலைமையில் வாக்னர் எனும் கூலி இராணுவப்படையும் உக்ரைனுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. போர் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில், கடந்த ஜூன் 23-24 தேதிகளில் வாக்னர் படையானது, ரஷ்ய அரசுக்கு எதிராக கலகம் செய்ய முயன்றது. குறிப்பாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக பிரிகோசின் மிக மோசமான வார்த்தைகளால் அவமானப்படுத்தினார்.

அசாதாரணமான அந்த நிகழ்வால், உலக நாடுகள் பரபரப்பு அடைய, ரஷ்யாவோ பெலாரஸ் நாட்டின் உதவியுடன் பிரிகோசினுடன் சமாதானம் செய்துகொண்டது.

ஆனால் ரஷ்யாவுக்காக வாக்னர் படை தொடர்ந்து போரிடுமா என கேள்வி எழுந்த நிலையில், கடந்த 29ஆம் தேதியன்று பிரிகோசின் உட்பட்ட வாக்னர் படைத் தளபதிகள் 35 பேருடன் புட்டின் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு ரஷ்யாவின் முன்னணி செய்தியேடான கொம்மர்சண்ட்டின் செய்தியாளர் அதிபர் புட்டினிடம் நேற்று பேட்டி எடுத்தார். அப்போது செய்தியாளர் ஆந்திரேய் கொலோஸ்னிகோவ் வாக்னர் படையின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த புட்டின், வாக்னர் படை இப்போது நீடித்து இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். தனியார் இராணுவ அமைப்புகள் குறித்த சட்டங்கள் இங்கு இல்லை; அது இப்போது இல்லை, அவ்வளவுதான் என்பதே புட்டின் அளித்த பதில்!

புட்டினின் இந்தக் கருத்து பற்றி ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அதிகாரிகள் வெள்ளியன்று விளக்கம் அளித்தனர். அப்போது, வாக்னர் படை எனப் பெயரிட்டுக் கூறும் அளவுக்கு அதற்கான எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை; இப்படியான தனியார் இராணுவத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது மிகவும் சிக்கலானது என்று கிரெம்ளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்துடன், இன்னுமொரு முக்கியமான விவரமும் அந்த செய்தியேட்டில் இடம்பெற்றுள்ளது. ஜூன் 29 அன்று கிரெம்ளின் மாளிகையில் வாக்னர் படை தளபதிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில், புட்டின் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அதில், பிரிகோசினுக்கு மாற்றாக மூத்த தளபதி செடாய் என்கிற ஆந்திரேய் டிரோசெவ் தலைமையில் வாக்னர் படை செயல்படலாம் என்பது முக்கியமான ஒன்று.

ஆப்கானிஸ்தான், செச்சன்யா நாடுகளில் ரஷ்யா நடத்திய போரில் பங்கேற்ற முக்கியமான இராணுவத்தினர் இவர் என்றும் புட்டினின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்றும் கூறப்படுகிறது. இந்த யோசனைக்கு பல தளபதிகளும் தலையசைத்து ஆமோதித்தனர் என்றும் ஆனால் முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரிகோசினுக்கு இது தெரிந்திருக்க வில்லை என்றும் கொம்மர்சண்ட் ஏடு தெரிவித்துள்ளது.

சகாக்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வில்லை என பிரிகோசின் கூறியதாக, புட்டின் தன் பேட்டியில் கூறியுள்ளார். கடந்த ஜூன் 24ஆம் தேதி ரஷ்யாவின் தெற்குப் பகுதி நகரான ரோச்டோவில் இருந்து வெளியேறிய பிறகு, பிரிகோசின் பொதுவெளியில் எந்த இடத்தில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”நான் பிரிகோசினாக இருந்தால் என்னுடைய உணவில் கவனமாக இருப்பேன். அதில் விசம் வைத்துவிடுவார்கள்.” என்று நகைச்சுவையோடு கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com