உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்டது. வறண்ட பிரதேசம் மற்றும் பனி படர்ந்த பிரதேசங்களையும் கொண்ட ரஷ்ய ஆய்வாளர்கள் சைபீரியாவில் சுமார் 18,000 ஆண்டுகள் பனியில் புதைந்திருந்த மிகப் பழமையான நாய்க்குட்டி ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த நாய்க்குட்டியின் உடல் ஆச்சரியம் தரும் வகையில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருந்ததாம். அதன் உடலை அந்நாட்டு ஆய்வாளர்கள் லவ் டேலன் மற்றும் டேவ் ஸ்டாண்டன் ஆகியோர் ஆய்வு செய்து இருக்கிறார்கள்.
அது நாயா அல்லது ஓநாயா என்பதில் குழப்பம் இருந்ததால் அதை, 'டோகோர்' என்று பெயரிட்டு ஆய்வாளர்கள் அழைத்துள்ளனர். அது நாயாக இருந்தால், வரலாற்றிலேயே உறுதி செய்யப்பட்ட முதல் நாயாக இது இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து பரிணாம மரபியல் பேராசிரியர் டாக்டர் டேலன் கூறும்போது, "இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீங்கள் அதை உங்கள் கைகளில் வைத்திருந்தால், அது எப்போதோ உயிரிழந்தது என்பதை உங்களால் நிச்சயம் உணர முடியாது. அந்தளவுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்துள்ளது. குகை சிங்கங்கள், கம்பளி காண்டாமிருகங்கள் வாழ்ந்த காலத்தில் இதுவும் இருந்தது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது" என்கிறார்.
தொடர்ந்து, ஆய்வாளர்கள் ரேடியோகார்பன் டேடிங்க் மூலம் அந்த விலங்கின் வயதைக் கண்டறிந்துள்ளனர். ஓநாய்களில் இருந்து நாய்கள் பிரிந்தது அனைவருக்கும் தெரியும். மரபணு ரீதியான ஆய்வில் முதற்கட்ட முடிவுகளால் அது நாயா அல்லது ஓநாயா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே சுமார் நான்கு ஆண்டு ஆய்வுக்குப் பிறகு அது என்ன என்பதை அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அதன்படி, டோகர் ஒரு நாய் அல்ல. இது ஆரம்பகால நாய்களுடன் கூட நெருங்கிய தொடர்பில்லாத ஓநாய் வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த நாயின் மரபணுவை 72 பழங்கால ஓநாய்களின் மரபணுக்களுடன் ஆய்வு செய்தனர். வரலாற்றில் நாய் வளர்ப்பில் மனிதர்கள் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த ஆய்வை நடத்தினர். இதன் மூலமே அந்த உயிரினம் நாய் இல்லை, ஓநாய் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
இது குறித்து லண்டன் ஆய்வாளர் ஆண்டர்ஸ் பெர்க்ஸ்ட்ராம் கூறுகையில், "பனி யுகத்தில் வளர்க்கப்பட்ட முதல் விலங்கு நாய்கள்தான். ஆனால், காட்டு விலங்காக இருந்த ஓநாயை எப்படி நாய்களாக மாற்றி வளர்த்தார்கள் என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. இது உலகில் எங்கு நடந்தது என்பது நமக்குத் தெரியாது. அப்போது மக்கள் பல குழுக்களாக வாழ்ந்த நிலையில், எந்த குழு இதற்குக் காரணம். இதை ஒரு குழு மட்டும் செய்ததா, இல்லை பல குழுக்கள் செய்ததா என எதுவும் நமக்குத் தெரியவில்லை" என்கிறார்.
நவீன ஓநாய்களின் மரபணுக்கள் காலப்போக்கில் நிறையவே மாறிவிட்டதால், ஓநாய்கள் நாய்களாக மாறிய சரியான நேரத்தைத் தெளிவாகக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. அதேநேரம், மேற்கு யூரேசியாவிலிருந்து வந்த பழங்கால ஓநாய்களை விட, கிழக்கு யூரேசியாவிலிருந்து வரும் பழங்கால ஓநாய்களுடன் நாய்கள் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள்.