புதினுக்கு நெருக்கமான ரஷ்ய கோடீஸ்வரர் மர்மமான முறையில் மரணம்.

புதினுக்கு நெருக்கமான ரஷ்ய கோடீஸ்வரர் மர்மமான முறையில் மரணம்.

ஷ்ய அதிபர் புதினுக்கு மிகவும் நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை உளவு பார்ப்பதற்கான அமைப்பை இவர்தான் செய்து கொடுத்தார் என்பதால், ஒருவேளை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். 

ரஷ்யா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரேன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் உக்ரேனை வெல்ல முடியாமல் இருப்பதே புதினுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஷ்யாவில் நடக்கும் பல சம்பவங்களும் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக போரில் உதவியாய் இருந்த வாக்னர் குழுவே அவருக்கு எதிராகத் திரும்பும் என எதிர்பார்க்கவில்லை. அந்தப் பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கபட்டாலும், அந்த நிகழ்வு புதினின் இமேஜை பாதித்துவிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றது. 

இந்நிலையில் புதினுக்கு நெருக்கமான ரஷ்ய பணக்காரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவர் ரஷ்ய மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காக மென்பொருளை உருவாக்கியவர். இவரின் இந்த செயலுக்காக அமெரிக்கா தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது. இவர் தற்போது உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 'ஆண்டன் செரபென்னிக்கோவ்' என்ற 40 வயது தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது அலுவலகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. 

உளவு பார்ப்பதில் கில்லாடியான ஆண்டன், ரஷ்யாவின் உளவு அமைப்பில் பொதுமக்கள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த உளவு அமைப்புக்கு ஏதுவாக, ரஷ்ய அரசாங்கம் 2018ல் தனியாக ஒரு சட்டத்தையே கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தால் உளவு அமைப்பு பொதுமக்களை கண்ட்ரோலில் வைக்க முடியும் என நம்பியது. இந்நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் என்பதை யாரும் நம்பவில்லை. 

ரஷ்யாவில் கடந்த சில காலமாக டாப் இடங்களில் இருப்போர் மர்மமாக இறந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டுமே பல பெரும் பணக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உயிரிழப்பு இயற்கையானது எனச் சொல்லப்பட்டாலும், இதை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஏனெனில் உயிரிழந்தவர்களில் பலர் அதிபர் புதினுக்கு நெருக்கமானவர்கள். 

எனவே தற்போது உயிரிழந்துள்ள ஆண்டனின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். இவருக்கு மக்களை உளவு பார்த்தல் தொடர்பாக பல சென்சிடிவ் தகவல்கள் தெரியும் என்பதால், ஒருவேளை இவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்கிற கண்ணோட்டத்திலும் பல சந்தேகக் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com