ஏவுகணைத் தாக்குதலில் 4 உக்ரைனியர்கள் பலி

File image
File image
Published on

ரஷ்யப் படைகள் இன்று நடத்திய பதில் தாக்குதலில் மைய உக்ரைனில் நான்கு பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

கிரிவ்யி ரி எனும் நகரத்தில் உள்ள குடியிருப்பு, பல்கலைக்கழகக் கட்டத் தொடரின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தக் குண்டுத் தாக்குதலில் பலரும் இடிபாடிகளில் சிக்கிக்கொண்டனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு ஏவுகணைகள் தாக்கியதில், ஒன்று குடியிருப்புக் கட்டடத்தின் நான்காவது முதல் ஒன்பதாவது மாடிவரையிலான பகுதியை நாசமாக்கியது. மரங்கள் வரிசையாகக் காணப்படும் அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கார்களும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்தன. அந்தப் பகுதியிலிருந்து கரும்புகை எழுந்ததைப் பார்க்க முடிந்தது என அமைச்சர் இகோர் கிளிமென்கோ கூறினார்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு மாடி பல்கலைக்கழக் கட்டடமும் தாக்கி நாசமாக்கப்பட்டது. மொத்தம் 53 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் பத்து வயது சிறுமி ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்யி ரியில் ரஷ்யப் படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். இன்று நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களிலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கார்கிவ் வட்டாரத்தில் வீட்டில் இருந்த 70 வயது பாட்டி ஒருவர் ரஷ்யப் படையின் தாக்குதலால் உயிரிழந்தார். இசியும் என்கிற கிராமத்தைச் சேர்ந்த பாட்டி மட்டுமல்லாமல், தெற்கு உக்ரைனிய நகரான கெர்சனில் இன்னுமொரு குடிமகன் ஒருவரும் கொல்லப்பட்டார்.

ரஷ்யப் படைகள் இன்று ஒரே நாளில் 12 நகரங்கள், கிராமங்களில் தாக்குதலில் ஈடுபட்டன.

டொனெட்ஸ்க் மாநிலத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் காயம் அடைந்தனர் என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் பாவ்லோ கிரிலெங்கோ கூறியுள்ளார்.

இதனிடையே, தற்போது ரஷ்யாவின் பிடியில் இருக்கும் உக்ரைனின் டோனட்ஸ்க் மாநிலப் பகுதியில், உக்ரைனியப் படைகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் காயம் அடைந்தனர் என்று ரஷ்யாவால் அங்கு நியமிக்கப்பட்ட தலைவர் டெனிஸ் புஷிலின் கூறியுள்ளார்.

டோனெட்ஸ்க் நகரின் மீது இன்று உக்ரைன் படைகள் பல முறை தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பேருந்து ஒன்றும் சேதம் அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரு தரப்பிலும் அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதும் ஆனால் இரு தரப்புகளுமே அதை மறுப்பதும் போரின் மோசமான அடுத்த கட்டத்தைக் காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com