ரஷ்யாவில் தனியார் படைத் தலைவர் பிரிகோசின்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காகப் போரிட்டுவரும் தனியார் படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின் விளாதிமிர் புட்டினைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்ற இச்சந்திப்பில் பிரிகோசினின் வாக்னர் படை கட்டளைத் தளபதிகள் 35 பேரும் கலந்துகொண்டனர் என்று கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
உக்ரைன் போர் முயற்சி குறித்தும் வாக்னர் படையின் கலகம் பற்றியும் ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களிடம் ஒரு மதிப்பீட்டை முன்வைத்தார் என்றும் பெஸ்கோ கூறினார்.
ரஷ்யாவுக்கான இந்த வாக்னர் படை திடீரென கடந்த மாதம் 23ஆம் தேதி கலகத்தில் ஈடுபட்டதும் 24 மணி நேரங்களில் அது முடிவுக்கு வந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதிகாரபூர்வமான ரஷ்ய அரசுப் படைகளுக்கும் வாக்னர் கூலிப் படையினருக்கும் உக்ரைன் போரில் பல முறை முரண்பாடுகள் வெளிப்பட்டன. வாக்னர் படைத் தலைவர் பிரிகோசின், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு, இராணுவத்தின் தலைமைத் தளபதி வேலரி கெரசிமோவ் இருவர் மீதும் பகிரங்கமாக தன் அதிருப்தியைத் தெரிவித்தார்.
அத்துடன் வாக்னர் படை ரஷ்யப் பகுதி ஒன்றைப் பிடித்துவைத்தது என்றும் மாஸ்கோவை நோக்கி முன்னேறிக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
உக்ரைனுக்கு எதிராக ஏவப்பட்ட வாக்னர் படைகள் ரஷ்ய நாட்டின் தலைநகரையே கைப்பற்றப் போகிறதா என உலக அளவில் அதிர்ச்சி அலைகள் தோன்றின.
புட்டினை இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீட்பதற்காக, ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்ட லுகாசென்கோ இரு தரப்புக்கும் இடையே சமாதானம் செய்துவைத்தார். அதையடுத்தே நிலைமை சுமூகமானது.
அதையடுத்து, கடந்த வியாழன் அன்று ஊடகங்களுக்குப் பேசிய பெலாரஸ் அதிபர், பிரிகோசின் ரஷ்யாவில்தான் இருக்கிறார் என்று தெரிவித்தார்.
புட்டினைப் பொறுத்தவரை வாக்னர் கூலிப் படையினரின் இந்தக் கலகம், அவருடைய 20 ஆண்டு கால அரசியல் அதிகாரத்தில் ஒரு கறையாகவே பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவருக்கு இப்படி ஒரு எதிர்மறையான சம்பவம் இதுவரை நடக்கவே இல்லை.
வாக்னர் படையுடனான சிக்கலுக்குக் காரணமான தலைமைத் தளபதி நீக்கப்படுவார் என்று பேசப்பட்டது. ஆனால் உக்ரைன் படையினருக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல் ஒன்றுக்கு அவர் கட்டளையிட்ட காட்சியை ரஷ்ய அரசு தொலைக்காட்சி திங்களன்று ஒளிபரப்பியது.
இதன் மூலம் அரசுப் படைத் தளபதியின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.