சபரிமலைக்கு சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் படங்களை எடுத்துச் செல்லத் தடை!

சபரிமலைக்கு சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் படங்களை எடுத்துச் செல்லத்  தடை!
Published on

சபரிமலை உள்ள சுவாமி ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிந்து 48 நாள் விரதம் இருந்து கோஷ்டியாக சன்னிதானம் செல்வார்கள். போகும் வழியில் எருமேலியில் பக்தர்கள் புலிமீது ஐயப்பன் அமர்ந்திருப்பது போல் வேடமணிந்தும், கையில் வில் அம்புடனும் ஆடிப்பாடுவது வழக்கம்.

இந்த நிலையில் பக்தர்கள் சிலர் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களின் படங்களையும் கையில் எடுத்துக் கொண்டு சன்னிதானம் வரை செல்வதாக பக்தர் ஒருவர் இமெயில் மூலம் புகார் அளித்திருந்தார்.

இதையே மனுவாக ஏற்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் புகைப்படம், போஸ்டர்கள், கட்அவுட்டுகளை சபரிமலை பக்தர்கள் சன்னிதானத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவில் வளாகத்திற்குள் பக்தர் உரிய முறையில் ஐயப்பனை வழிபடுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன் மற்றும் பி.ஜி.அஜீத்குமார் ஆகியோர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் படங்களையும் போஸ்டர்களையும் எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளது. சிலர் டிரம்கள் உள்ளிட்ட இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதும் கவனத்துக்கு வந்துள்ளது.

ஐயப்பன் மீது பக்தி செலுத்தும் ஒருவர் 48 நாள் விரதம் இருந்து இருமுடி தாங்கி சபரிமலை சன்னிதானத்துக்கு வருகின்றனர். அவர்கள் தேவஸ்தான போர்டு நடைமுறைகளுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய கடமைப்பட்டவர்கள். ஆனால், அவர்கள் பதினெட்டாம் படி வழியாகச் செல்லும்போது சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் படங்களை கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது.

சமீபத்தில் இசைக்கலைஞரும் டிரம் இசையில் வல்லவரான சிவமணி சபரிமலை சோபனம் முன்பாக கருவறை திறக்கும்போது டிரம் வாசித்ததாக தெரியவந்துள்ளது. அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இனிஇதுபோன்ற செயல்களை அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com