தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

"தி கேரளா ஸ்டோரி" படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நாளை வெளியாக உள்ளது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் கூறுகிறது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் போராட்டங்களுக்கு இடையே, படத்தின் வெளியீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.

இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில் வெளியிடக்கூடாது என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. தமிழ்நாடு உளவுத்துறைக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில், தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை வெளியிட்டால் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படம் வெளியாவதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவுவதன் காரணமாக தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com