ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் புனரமைப்பு செய்யப்பட்டு புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்புவிழா காணத் தயாராக உள்ளது. மேலும் பல நவீனத் திட்டங்களும் கலைஞரை பெருமைப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப் பட்டுள்ள கலைஞரின் சிலையும் முதல்வரின் வருகைக்காக தயார் நிலையில் உள்ளது. இந்தத் திறப்பு விழாவை முன்னிட்டு சேலம் நகரமே ஆவலுடன் காத்திருக்கிறது எனலாம். இதற்காக முதலமைச்சர் அவர்கள் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மாலை சேலம் வருகை தருகிறார்.
சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளின் முதல் கட்டமாக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 6:00 மணிக்கு சேலம் ஐந்து ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தலைமை தாங்குகிறார். சேலம் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேச இருக்கிறார்.
இன்று இரவு சேலத்தில் தங்கும் அவர் நாளை ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பதரை மணிக்கு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி முழு உருவ சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். அதன் பிறகு அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ உ சி மார்க்கெட். பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார்.
இதையடுத்து கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்தட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். அங்கு சுமார் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். தொடர்ந்து மேட்டூருக்கு செல்லும் அவர் இரவில் அங்கு தங்குகிறார். நாளை மறுநாள் திங்கட்கிழமை காலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். இதற்காக மேட்டூர் அணையில் பராமரிப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும்பணிகள் ஆகியவைகளின் இறுதிக் கட்டப்பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது.
முதலமைச்சர் பங்கேற்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு அவர் செல்லும் இடங்களில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். முதல்வரின் சேலம் வருகையை ஒட்டி அவர் செல்லும் சாலைகள் சரி செய்யப்பட்டு சேலத்தின் முக்கிய இடங்கள் புதுப்பொலிவுடன் உள்ளதை குறிப்பிட வேண்டும்.