சேலம் கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா... களை கட்டும் ஆடி விழா!

சேலம் கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா... களை கட்டும் ஆடி விழா!
Published on

டி மாதம் வந்து விட்டாலே அம்மன் பக்தர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் ஊரைக் காக்கும் அம்மன்கள் மற்றும் குலங்களைக் காக்கும் அம்மன்களுக்கு விழா மற்றும் பண்டிகைகள் இந்த மாதத்திலேயே அதிகம் நடைபெறும். அந்த வகையில் மாரியம்மன் பண்டிகை என்றாலே சேலம் பிரசித்தி பெற்றது. விருந்தினர் வருகையும் மாவிளக்கும் கலை நிகழ்ச்சிகளுமாக களை கட்டிவிடும்.

இங்கு குடிகொண்டு மக்களுக்கு நன்மைகள் வழங்கி வரும் எட்டுப் பேட்டை அம்மன்களுக்கும் ஆடி மாதம் வெகு சிறப்பாக விழாக்கள் நடைபெறுவது நீண்ட காலமாக இருந்து வரும் வழக்கம். அம்மன்களுள் முதன்மையாக விளங்கும் கோட்டை மாரியம்மனுக்கு விழாவின் துவக்கமாக பூச்சாட்டுதல் விழா நாளை  (25 ந்தேதி) நடைபெற இருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தில் பல மாற்றங்களைப் பெற்று புதுப்பொலிவுடன் விளங்கும் சேலம் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது  கோட்டை மாரியம்மன் கோவில். இந்தக்  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவார்கள். இதைத் தவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி  கிரகம் மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். ஆனால் கோவிலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் நடப்பதால் பொங்கல் வைபோகம் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்று வந்தது.

தற்போது கோவிலில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால் இந்த வருடம் புதிய கோவிலில் விமர்சையாக ஆடித்திருவிழா கொண்டாடப்பட ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நாளை  இரவு 8 மணியளவில் விழாவின் துவக்கமாக அம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. கடந்த 17 ந்தேதி கம்பம் நடும் விழாவுடன் துவங்கிய ஆடிப் பண்டிகையின் அடுத்த கட்டம் இந்த பூச்சாற்றுதல். பக்தர்கள் தரும் பல வகை மணம்வீசும் மலர்களை அம்மனுக்கு சாற்றுவது கொள்ளை அழகு.  

ஆகஸ்டு ஏழாம் தேதி சக்தி அழைப்பும் ஒன்பதாம் தேதி முதல் பதினொன்றாம் தேதி வரை பொங்கல், மாவிளக்கு மற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 15ஆம் தேதி காலை 10 மணிக்கு பால்குடவிழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானங்களும் நடக்கிறது இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பண்டிகைகள் மக்களிடையே சமத்துவத்தையும் புரிதலையும் ஒற்றுமையையும் வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில்  தற்போது பெரும்பாலான  கோவிலின் பணிகள் நிறைவடைந்து பளிச்சிடும் வர்ணங்களுடன் திகழும் கோவிலில் ஆடிப் பண்டிகையுடன் விரைவில் கும்பாபிசேகத்தையும் கொண்டாட மக்கள் ஆவலுடன் காத்து உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com