தாத்தா என்றழைத்து முதல்வரின் கவனத்தைக் கவர்ந்த சேலம் சாதனைச் சிறுமி.

தாத்தா என்றழைத்து முதல்வரின் கவனத்தைக் கவர்ந்த சேலம் சாதனைச் சிறுமி.

ம் மனம் கவர்ந்த ஹீரோவை சந்திக்க வேண்டுமென்றால் அதீத முயற்சிகள் தேவை. அது அரசியல் என்றாலும் சினிமா என்றாலும் நாம் விரும்புபவர்களின் தரிசனத்தை எளிய மக்கள் பெறுவதென்பது அவ்வளவு எளிதன்று. அப்படித்தான் நான்கு நாட்களாக பிரயத்னம் செய்தும் காண வாய்ப்பின்றி தவித்த பெற்றோர் தங்கள் மகளின் ஒற்றை வார்த்தையால் முதல்வரை சந்தித்த நெகிழ்வான செய்தி இது.
      சேலத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்பவர் தீவிர திமுகவின் தொண்டர். இவருக்கு மிர்லா தேவி என்ற மனைவியும், அகமகிழ்தினி என்ற ஆறு வயது மகளும் உள்ளனர். ஆறுவயது சிறுமியான அகமகிழ்தினி கண்ணை கட்டிக்கொண்டு தன்முன் காண்பிக்கும் பொருளின் வண்ணங்களை கூறி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதை முன்னிட்டு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே கோகுல்குமார் மனைவி மகளுடனும் சென்னைக்கு வந்து காத்திருந்தனர்.

      பலமுறை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியபோதும் முதலமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை இவர்களுக்கு. இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று கோகுல்குமார் பிர்லாதேவி தம்பதியினர் மகளுடன்  அண்ணா அறிவாலயம் வந்திருந்தனர். அப்போது இவர்களின் அதிர்ஷ்டம்  முதலமைச்சர் மு க ஸ்டாலின் காரில் அண்ணா அறிவாலயம் வந்துள்ளார்.

     பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் நிறைந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் இருந்தபோது கார் வந்ததும் எதிர்பாராத விதமாக சிறுமி அகமகிழ்தினி ஸ்டாலினை நோக்கி “தாத்தா தாத்தா’ என்று வாஞ்சையுடன் உரக்க அழைக்க இதனைக் கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தனது பாதுகாவலர்களை அழைத்து அந்த சிறுமியும் அவரது பெற்றோரையும் அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட உடனடியாக பாதுகாவலர்கள் இருவரையும் அழைத்துச் சென்றனர்.

       முதலமைச்சர் சிறுமியை ஆசிர்வதித்து கொஞ்சிப் பேசி மகிழ்ந்துள்ளார். சிறுமியின் பெற்றோரிடமும் நலம் விசாரித்துள்ளார். முதலமைச்சரை நேரில் சந்தித்த உற்சாகத்துடன்  கோகுல்குமார் குடும்பத்தினர் வெளியே வந்தனர். 

     இது குறித்து சிறுமியின் தந்தை  “ கார் வந்தபோது எங்கள் பாப்பா தாத்தா என்று கத்தின பிறகுதான் எங்களை உள்ளே விட்டார்கள். அதற்கு முன்னால் எங்களை உள்ளே விடவே இல்லை. முன் அனுமதி வேண்டும் என்று கூறினார்கள். நானும் நான்கு நாட்களாக தொடர்ந்து போன் செய்தேன். நேரில் வந்து பார்த்துவிட்டும் சென்றோம்.  முதலமைச்சரைப் பார்க்கவே முடியவில்லை. இப்போது எனது மகளின் தாத்தா தாத்தா என்றழைத்த காந்த குரலால் முதலமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

      முதல்முறையாக முதலமைச்சரை நேரில் பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலமைச்சரிடம் ஆசிர்வாதம் வாங்கியது  மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதாவது வேண்டுமென்றால் எனக்கு மனு கொடுங்கள் என்று முதலமைச்சர் தெரிவித்தார். நாங்கள் விரைவில் மனு எழுதி கொடுப்போம் பள்ளிக்கு லீவு போட்டு விட்டுத்தான் நான்கு நாட்களாக இங்கே இருந்தோம்“ என்றார்.

    நான்கு நாட்களாக காத்திருந்தும் சந்திக்க முடியாத முதல்வரை, மகள் அழைத்த ஒற்றை வார்த்தையால் முதல்வரை சந்தித்த சந்தோசத்துடன் சேலம் திரும்பி இருக்கிறார்கள் கோகுல்குமாரின் குடும்பம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com