தேசிய அளவிலான போல்வால்ட் எனும் கம்பு மூலம் உயரம் தாண்டும் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த பவித்ரா வெங்கடேஷ் (22 வயது) தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளதால் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்
தேசிய அளவிலான 62வது சீனியர் தடகள போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இது கடந்த 15ஆம் தேதி துவங்கியது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான அணிகள் இதில் பங்குபெற்று விளையாடி வருகின்றனர். கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான (போல்வால்ட்) கம்பு மூலம் உயரம் தாண்டுதல் போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு அணியின் சார்பில் சேலம் நகரமலை பகுதியைச் சேர்ந்த வீராங்கனை பவித்ரா பங்கு பெற்றார். இவர் தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் இப்போட்டியில் இதுவரை யாரும் எடுக்காத அளவில் 4.10 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கத்தை பெற்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் செப்டம்பர் மாதத்தில் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளார் இவர். இவரின் இந்த சாதனை தேசிய தடகளத்தில் புதிய சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு கவுகாத்தி வீராங்கனை வகாரியா 4,00 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்த நிலையில் அதை முறியடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை பவித்ராவின் தேசிய பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இவர் பயிற்சியில் பங்கேற் பதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் மாவட்ட தடகள பயிற்சியாளர் இளம்பரிதி செய்திருந்தார்.
இந்த வெற்றி குறித்து பவித்ரா “ அப்பா வெங்கடேஷ், அம்மா வளர்மதி. தற்போது சதர்ன் ரயில்வே பணியில் உள்ளேன். சின்ன வயசுல இருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். ஒன்பதாவது படிக்கும் பொது இந்த விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் பயிற்சிகள் எடுத்தேன். பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றேன். இரு வருடங்கள் முன் சென்னையில் நடைபெற்ற அறுபதாவது தேசிய ஓபன் தடகளப் போட்டியில் தங்கம் வென்றேன். இப்போது தமிழக அணியின் சார்பில் பெற்ற இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியாக இருந்தாலும் மேலும் சாதிக்க வேண்டும் என்ற இலக்கும் உள்ளது. இந்த சாதனைக்கு பின்புலமாக இருந்து எனக்கு உதவி செய்யும் எனது பயிற்சியாளர் இளம்பரிதி சாருக்கும் பயணச் செலவுகளை ஏற்கும் அரசுக்கும் எனது நன்றிகள்.இன்னும் சில சலுகைகளை அரசு எங்களுக்குத் தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்'' என்கிறார்.
கிரிக்கெட்டுக்குத் தரும் முக்கியத்துவத்தை இது போன்ற தடகள விளையாட்டுகளுக்கும். தந்தால் பவித்ரா போன்ற பலரின் திறமைகள் வெளிப்ட்டு நாட்டுக்கு பெருமை சேர்க்கும்.