

நாடு முழுவதும் 77-வது குடியரசு தினம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவார். இதில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அரசு & அரசியல் தலைவர்கள் , ராணுவ & பாதுகாப்புப் படை தலைவர்கள் , பத்ம விருதுகள் (Padma Awards) பெற்றவர்கள், ராணுவ விருது தேசிய விருது பெற்றோர் , வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் (Ambassadors, High Commissioners) இவர்களுடன் சிறப்பு பங்களிப்பாளர்களாக ஏதேனும் ஒரு துறையில் சிறப்பாக செயல்படும் பொது மக்களுக்கும் குடியரசு தலைவரால் அழைப்பு அனுப்பப்படும்.
அந்த வகையில், மத்திய அரசின் அழைப்பின் பேரில் கோவையைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி இந்திராணி ஆகியோருக்கு குடியரசுத் தலைவருடன் தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது.குறிப்பாக, பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டப் பயனாளியான சங்கீதா, ஆட்டோ ஓட்டித் தனது உழைப்பினால் முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போலவே, பாலக்காட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற விவசாயிக்கும் (பாரம்பரிய நவரா அரிசி சாகுபடிக்காக) அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான தேவூரில் வசிக்கும் இளைஞர்களான பிரேம் செல்வராஜ் மற்றும் அசோக் ஜெகதீசன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் படிப்பை முடித்த நிலையில் தங்கள் பகுதி மற்றும் குடும்பத் தொழிலான கைத்தறி நெசவின் மீது கவனம் கொண்டனர். என்ன செய்யலாம் என சிந்தித்ததின் விளைவாகத் தோன்றியது இயற்கை முறையில் கைத்தறியால் உருவாகும் யோகா மேட்.பாரம்பரிய நெசவுத் திறனை நவீன வாழ்க்கைமுறையுடன் இணைக்கும் சிறந்த முயற்சியான யோகா மேட் தயாரிப்புக்கு மத்திய அரசின் மானியமும் கிடைக்க தற்போது இவர்களால் 200 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுவதும் இயற்கையான முறையில் உருவாக்கப்படும் யோகா மேட் இத்தாலி,அமெரிக்கா,ஆஸ்திரேலியா , நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மத்திய அரசின் டெக்ஸ்டைல் துறை தங்கள் புதுமையான சிந்தனைக்கு உதவியதுடன் பல சலுகைகளையும் வழங்கியதாக தனியார் பேட்டியில் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் , உடல்நலம் பாதுகாப்பு, வருமான வாய்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் யோகா மேட் மூலம் பலருக்கும் வாழ்வாதாரம் பெற வழிவகுத்த இந்த பட்டதாரி இளைஞர்கள் புதுமையாக யோசித்தால் வெற்றி நிச்சயம் என்று பரவலாக பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.இந்த இளைஞர்களைத் தேவூர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.தற்போது இவர்களுக்கு குடியரசுத் தலைவரின் அழைப்பிதழ் மூலம் மேலும் அங்கீகாரம் மற்றும் சிறப்பு தருவதாக இந்த இளைஞர்களை கொண்டாடுகிறார்கள் தேவூர் மக்கள்.
மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களின் கைவண்ணத்தில் உருவான குடியரசு தின அழைப்பிதழை அனைவரும் ஆச்சரியம் கலந்த பெருமையுடன் பார்த்து வருகின்றனர்.