நாகாலாந்தின் முதல் பெண் மந்திரியாக சல்ஹுதுனோ க்ரூஸ் பதவியேற்றார்!

நாகாலாந்தின் முதல் பெண் மந்திரியாக சல்ஹுதுனோ க்ரூஸ் பதவியேற்றார்!

நாகாலாந்து 1963 இல் மாநில அந்தஸ்தைப் பெற்றது, ஆனால் க்ரூஸ் மற்றும் அவரது சக கட்சி உறுப்பினரான ஹெகானி ஜகாலுவுக்கு முன்பு அங்கு எந்த ஒரு பெண்ணும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்த 5 நாட்களுக்குப் பிறகு, சல்ஹூதுனோ க்ரூஸ் செவ்வாய்க்கிழமை அமைச்சராகப் பதவியேற்று மீண்டும் இன்னொரு வரலாறு படைத்தார்.

க்ரூஸ் மற்றும் ஹெகானி ஜகாலு ஆகியோர் மார்ச் 2 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நாகாலாந்து மாநிலத்தின் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தனர். ஏனெனில் 1963ல் மாநில அந்தஸ்தை அடைந்தது முதலே அங்கு இதற்கு முன் எந்த ஒரு பெண்ணும் சட்டமன்ற தேர்தலில் இதுவரை வெற்றி பெற்றதில்லை .

60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து ஹவுஸில், அதிகபட்சமாக 12 பேர் அமைச்சர் பதவியில் சேர்க்கப்படலாம். ஜகாலு அமைச்சர் பதவிக்கு பரிசீலிக்கப்படவில்லை.அவரும், க்ரூஸும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் உறுப்பினர்கள்.

55 வயதான க்ரூஸ், அமைச்சராகப் பதவியேற்ற பிறகு மிகவும் பரவசமடைந்தவராகக் காணப்பட்டார்.

“எனக்குத் தரப்பட்ட இந்தப் பொறுப்பை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதில் இருந்து கொண்டு என்னால் இயன்றதைச் செய்வேன், பெண்களை தைரியமாகவும், நேர்மையாகவும், கடின உழைப்பாளியாகவும் இருக்க ஊக்குவிப்பேன், இதனால் நாம் ஒன்றிணைந்து உழைத்து, இதுவரை பெறாதவற்றைப் பெற முடியும் ” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த 24 ஆண்டுகளாக சமூக சேவகராகப் பணியாற்றி வந்த க்ரூஸ் கோஹிமா மாவட்டத்தில் உள்ள மேற்கு அங்கமி தொகுதியில் நின்று 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றிக்குப் பின்னான செய்தியாளர் சந்திப்புகளில் பேசுகையில், தேர்தலில் போட்டியிட்டதின் பலனாக அவர் பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்ததாகக் கூறியிருந்தார்.

அதில் முதல் சவால் என்றால், இதுவரை எந்தப் பெண்ணும் தேர்தல் களம் கண்டிடாத நாகாலாந்து மண்ணில், தேர்தலில் நிற்கலாம் என்ற தைரியமான முடிவுக்கு தான் வந்ததே முதல் பெரிய சவாலாக அமைந்தது. அத்துடன் நாகாக்கள் இன்னுமே கூட கொஞ்சம் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் தான். அவர்களுக்கிடையில் போட்டியிட்டு வென்றதெல்லாம் பிறகு சவாலில்லாமல் வேறென்ன?! என்கிறார் க்ரூஸ்.

க்ருஸூக்கு இளமைப் பருவத்திலிருந்தே, சமூகத்திற்குச் சேவை செய்யும் இதயம் இருந்தது, இது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான அவரது தொடர்புகளில் பிரதிபலித்தது.

அவரது கணவரும் கூட ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டார் ஆனால் வெற்றிபெறவில்லை. அவர் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பினார், ஆனால் விதி வசத்தில் 2021 இல் கோவிட் நோயால் தனது உயிரை இழந்தார்.

2006 இல் யூத்நெட் என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவியவரும் அமெரிக்காவில் படித்த வழக்கறிஞரும் சமூகத் தொழில்முனைவோருமான ஜகாலு, நாகாலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற மற்றொரு பெண். இவர், தனது வெற்றியையும், க்ரூஸின் வெற்றியையும் மாநிலப் பெண்களின் ஒட்டுமொத்த வெற்றியாகக் கருதுவதாகக் கூறுகிறார். ஏனெனில் இவர்களல்லவோ பூனைக்கு முதல் மணி கட்டியிருக்கிறார்கள். இனி அடுத்தடுத்து பெண்கள் இங்கு தேர்தல் களம் காணும் ஒரு வாய்ப்பை இவர்கள் தானே துவக்கி வைத்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com