சமயபுரம் மாரியம்மன் சித்திரைத் தேர்...!

சமயபுரம் மாரியம்மன் சித்திரைத் தேர்...!

மிழ்நாட்டின் சக்தி பீடங்களில் சக்தி வாய்ந்தது, மிகவும்  முக்கியமானது சமயபுரம். சமைஞ்சா சமயபுரம். சாதிச்சா கண்ணபுரம். ஆதி சமயபுரம் என்று அடுக்கடுக்காகப் பலப்பல மகத்துவங்களுக்கு உரித்தானவள் இந்த சமயபுரம் அருள்மிகு மாரியம்மன். வேண்டுவோர்க்கு வேப்பிலைக்காரியாகவும் உருவெடுத்து, அவர்களின் வேதனைகளைத் தகர்த்தெரிபவள்.

இன்று சித்திரை மாதம் 5ஆம் நாள் (18.04.2023) செவ்வாய்க் கிழமை காலையில், சமயபுரம் மாரியம்மன் திருத்தேர் உலா பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க சீரும் சிறப்புமாக நடந்தேறியது.

மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று அம்மனுக்கு முதல் பூச்சொரிதல் விழா. சமயபுரத்தின் எட்டுத் திசைகளில் இருந்தும் பக்தர்கள் பூந்தட்டுகள், பூங்கரகங்கள் போன்றவைகளைச் சுமந்து பாத யாத்திரையாக வந்திருந்து அம்மனுக்குச் சமர்ப்பிப்பார்கள். இந்தக் கோடையின் கடும் வெப்பத்தினை மலை போலக் கொட்டுகின்ற பூக்களின் குளிர்ச்சியினால், அம்மனின் மனம் குளிரவே இந்த நிகழ்வு. அம்மனுக்கு முதல் பூ, இரண்டாவது பூ, மூன்றாவது பூ, நான்காவது பூ, ஐந்தாவது பூ என்று பங்குனி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மனுக்குப் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

பொதுவாக அம்மனுக்கு வேண்டிக் கொண்டு பக்தைகள் தானே விரதம் மேற்கொள்வார்கள். அந்த நாட்களில் விரதம் கடைபிடிப்பார்கள். இங்கு அம்மனே விரதம் இருக்கிறாள். ஆம். அதுவும் பச்சைப் பட்டினி விரதம். மஞ்சள் ஆடை அணிந்து, வழக்கம்போல் தனக்காகப் படைக்கப்படும் அத்தனை நைவேத்தியங்களையும் தவிர்த்து விட்டுப் பச்சைப் பட்டினி விரதம் இருக்கிறாள். உப்பில்லா நீர்மோரும், இனிக்கும் கரும்பு பானகமும், குளிர்ச்சி தரும் இளநீர் மட்டுமே எடுத்துக் கொள்கிறாள். மாசி மாதம் கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை ஆக மொத்தம் இருபத்தியெட்டு நாட்கள், சமயபுரம் மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கிறாள்.

திருத்தேர் உலாவுக்கு முன்பாக அம்மன் ஒவ்வொரு நாள் இரவிலும் பல்லக்கிலும், சிம்ம வாகனத்திலும், பூத வாகனத்திலும், அன்ன வாகனத்திலும், ரிஷப வாகனத்திலும், யானை வாகனத்திலும், சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இறுதியாக குதிரை வாகனத்தில் எழுந்தருளித்து தனது ஆதி பிறப்பிடமான ஆதி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு தங்குகிறாள். பின்னர் அன்றிரவே அங்கிருந்து கிளம்பி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் மூலஸ்தானம் வந்து சேருகிறாள்.  

மறுநாள் காலையில் சித்திரைத் தேர். அதாவது சித்திரை மாதம் பிறந்து, வருகிற முதல் செவ்வாய்க்கிழமை அன்று சமயபுரம் மாரியம்மன் திருத்தேர். இன்று செவ்வாய்க் கிழமை  (18.04.2023) காலை 1௦.31 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் நன்னேரத்தில், அம்மன் திருத்தேர் பீடத்தில் எழுந்தருளி, பெரும் திரளாகத் திரண்டிருந்த பக்தர்களுக்கு சேவை சாதித்தாள். பக்தர்கள் வடம் பிடித்து இழுத்திட திருத்தேர் உலா வரத் தொடங்கியது. “ஆயிரம் கண்ணுடையாளே” “ஆத்தா....”  “சமயபுரமாத்தா” “சமயபுரம் மாரியாத்தா” என்று பக்தர்களின் குரல்கள் விண்ணைத் தொட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com