சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டங்கள் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தின் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்த விழாவில் பேசிய அவர், “தமிழ்நாடு ஒரு புனிதமான இடம். இங்கு பல ஆன்மிக சிந்தனையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். சனாதன தர்மம் மற்றும் பாரதம் என்ற நாடு உருவாக தமிழ்நாடு முக்கியமான பங்கு வகித்து இருக்கிறது. இந்தியாவுக்கு என்று ஓர் அறிமுகம் தேவைப்படுகிறது. ஆனால், பாரதத்துக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.

ஆங்கிலேயர்கள் பெயர் வைத்ததால்தான், ‘இந்தியா’ என்ற பெயர் உருவானது. அதனால்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் INDIA IS BHARAT என கூறப்பட்டு இருக்கிறது. பலரும் சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்துகிறது, பாகுபாட்டை வலியுறுத்துகிறது எனக் கூறுகின்றனர். சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை.

சிலர் இந்த நாடு 1947ம் ஆண்டுதான் உருவானது என்று நினைக்கின்றனர், இது மிகவும் நகைச்சுவையான ஒன்று. ‘இந்தியா ஒரு சனாதன நாடு. பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் எப்போதும் பிரிக்கவே முடியாது’ என ரிஷி அரவிந்தோ தெரிவித்து இருக்கிறார்.  சனாதன தர்மம். ’இந்த உலகமே ஒரு குடும்பம்’ என்று கூறுகிறது. அதுதான், ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்.’ இந்த நாடு தொடர்ந்து சனாதன தர்மத்தை மேற்கொண்டு வந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டுக்கென்று ஒரு வாழ்க்கை முறை உள்ளது. வேறு எந்த ஒரு நாட்டிலும் இப்படியான ஒரு வாழ்க்கை முறை கிடையாது.

இக்கால இளைஞர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பது இல்லை. கடவுளை வழிபடுவதை மட்டுமே மடங்களில் கற்பிக்கிறார்கள் என்று பலரும் நினைக்கின்றனர். மடங்களில் கடவுளை வழிபடுவது ஒரு வேளை மட்டுமே. ஒரு காலத்தில் கல்வி, மக்கள் சேவை, பொது சேவை என அனைத்தையும் இதுபோன்ற மடங்கள்தான் கற்பித்து வந்தன. இதனை நாம் இழந்துவிட்ட பிறகுதான் அனைத்தையும் அரசிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இந்தியாவின் வளர்ச்சி என்பது வெறும் பொருள் அளவில் மட்டுமே இருக்கக் கூடாது. அறிவியல் ரீதியாகவும், பொருளாதார அளவிலும் தற்போது இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. பிரதமர் மோடியின் பேச்சை உலகின் ஒட்டுமொத்த நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உருவாகி உள்ளன. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு இந்தியாவில்தான் உள்ளது. அதற்கு இந்தியாவின் வளர்ச்சி பெரிதும் முக்கியம். அந்த வளர்ச்சி ஆன்மிக வளர்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்துவரும் 25 ஆண்டுகளில் சனாதன தர்மத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாதவர்களும் இதில் பயணம் செய்வார்கள்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com