ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிக்கு அனுமதி: வலுக்கிறது எதிர்ப்புக்குரல்!

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிக்கு அனுமதி: வலுக்கிறது எதிர்ப்புக்குரல்!

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு முதல் தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் தடியடி முதல் துப்பாக்கிச் சூடு வரை நடைபெற்று 13 பேர் வரை இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்தே ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த ஆலையை எப்படியும் திறந்தே தீருவது என முடிவோடு இருக்கிறது. வேதாந்தா குழுமம். அதற்காக அரசை எதிர்த்து, நீதிமன்றத்தை கெஞ்சி வருகிறது.

இந்த நிலையில், ‘ஆலையில் பராமரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டும், நிபுணர் குழுவின் அறிக்கையின்படி ஆலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் ஆலையின் மற்ற உபகரணங்கள் பாதிக்கும்’ எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்திருந்தது வேதாந்தா நிறுவனம். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அதை நிராகரித்தது நீதிமன்றம். அதேசமயம், ‘ஜிப்சம் கழிவுகளை அகற்ற ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும், அதனை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்யவில்லை என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜிப்சம் கழிவுகளை அகற்ற அரசு ஒருபோதும் தடையாக இருக்காது எனவும் அரசு சார்பில் கூறப்பட்டதை அடுத்து, ஜிப்சம் கழிவுகளை அகற்றுவது, பசுமை மண்டலத்தை பாதுகாப்பது தொடர்பான பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு அனுமதி அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ‘ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்கக் கூடாது. எந்தவித பராமரிப்பு பணியாக இருந்தாலும் அதனைத் தமிழக அரசே நேரடியாகச் செய்ய வேண்டும்’ எனக் கூறி, எதிர்ப்பு இயக்கங்களும், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதுபற்றி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்துவிடுவது என்ற நோக்கில் பல்வேறு உள்ளடி வேலைகளை வேதாந்தா நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தூத்துக்குடி பகுதி மக்களிடம் அவர்களின் கொந்தளிப்பைத் தணிக்கும் விதமாகப் பேசி வருவது, விளம்பரங்கள் மூலம் தங்களை நல்ல நிறுவனமாகக் காட்டிக்கொள்வது, தமிழ்நாடு ஆளுநரை ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேச வைப்பது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கவின் உதவியை நாடி ஆலையைத் திறக்க திட்டம் தீட்டுவது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களை ஆலை வளாகத்தில் அனுமதிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்’என்று கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com