ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் 4 இந்திய நிறுவனங்கள் உட்பட 400 நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா.
ரஷ்யா உக்ரைன் போர் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுமே போரை நிறுத்த முன்வருவதாக தெரியவில்லை. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது. மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
உக்ரைனுக்கு பல நாடுகள் உதவி செய்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு அதிகம் உதவி செய்து வருகிறது.
அந்தவகையில்தான் அமெரிக்கா ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்துவதற்கான ஷிப்பிங் உதிரிபாகங்கள் மற்றும் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை ஏற்றுமதி செய்து வந்ததாக ஹாங்காங்கை தளமாகக் கொண்ட நிறுவனங்களையும் குறிவைத்து அமெரிக்கா இந்த தடையை அறிவித்து உள்ளது.
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவின் போர் இயந்திரங்களை மூன்று ஆண்டுகளாக இயக்க உதவிய இந்தியா, சீனா மற்றும் துருக்கியில் உள்ள தனி நபர் நிறுவனங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின் பலத்தை குறைக்க முடியும் என்று அமெரிக்கா நினைக்கிறது.
இதில் இந்தியா, துருக்கி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நாடுகளில் உள்ள நிறுவனங்களும் அடங்கும்.
இப்படியே போர் தொடர்ந்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரியில் நடந்த படையெடுப்பிற்குப் பிறகு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மீது ஆயிரக்கணக்கான பொருளாதாரத் தடைகளைக் குவித்துள்ளது. இருப்பினும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 இல் 3.5% முதல் 4% வரை வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யா உக்ரைன் போர் உச்சத்தை அடைந்து வருகிறது. ஏனெனில் சமீபத்தில் அமெரிக்கா நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளது என்று ரஷ்யா அணு ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.