சங்கர நேத்ராலயா நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்!

Sankara Nethralaya Founder Dr. SS Badrinath passed away
Sankara Nethralaya Founder Dr. SS Badrinath passed away

ங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் இன்று காலமானார். அவருக்கு வயது 83. இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை சென்னையில் நிறுவியவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத். இவர் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை வெளிநாடுகளில் முடித்துவிட்டு, 1978ம் ஆண்டு இந்த அமைப்பை சென்னையில் நிறுவினார்.

சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த மக்களும் தரமான இலவச மருத்துவ சிகிச்சையை பெற இவர் பெரிதும் உதவினார். இவரது தொண்டு நிறுவனமான சங்கர நேத்ராலயா மூலம் தினமும் ஏராளமானோர் பயன் பெற்றனர். அதன் பிறகு இந்த நிறுவனம் ஒரு மருத்துவ சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் சென்னை புறநகர் ஒன்றில் பிறந்தார். தனது இளமைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த இவர், தனது பெற்றோர் மரணத்தின் மூலம் கிடைத்த காப்பீட்டுத் தொகையை மருத்துவ அறிவியலில் தமக்கிருந்த ஆர்வத்தைத் தொடரப் பயன்படுத்தினார்.

தனது மருத்துவக் கல்வி வாழ்க்கையை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து தொடங்கிய இவர், அங்கு பல கண் மருத்துவ மையங்களில் பயிற்சி பெற்றார். அதைத் தொடர்ந்து 1978ம் ஆண்டு, டாக்டர் பத்ரிநாத் ஒரு மருத்துவக் குழுவோடு சென்னையில் ‘சங்கர நேத்ராலயா’ எனும் தொண்டு  நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு லாப நோக்கமற்ற, தரமான இலவச கண் சிகிச்சை மருத்துவத்தைக் கொடுக்க முன்வந்தார்.

அவர் தொடங்கிய இந்த மருத்துவமனையில் தினமும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இலவச கண் அறுவை சிசிக்சை செய்யப்படுகின்றன. மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் வளரும் கண் சிகிச்சை நிபுணர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் கொடுக்கப்படுகின்றன. இவரது மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக இந்திய அரசாங்கம் டாக்டர் பத்ரிநாத்க்கு பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கொண்டாடி முடிக்கப்பட்ட தீபாவளி பண்டிகையின்போது, பொதுமக்கள் எப்படிப் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறித்து நமது கல்கி இணைய தளத்தின் மூலம் அவர் பல்வேறு தகவல்களைக் கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது.

ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்,  ஏழை , எளிய மக்களும் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும் என்ற அவரது கருணை உள்ளம் என்றென்றும் நினைவுகொள்ளப்படும். அவரது மறைவு மருத்துவ உலகுக்கு மட்டுமின்றி, ஏழை-எளிய மக்களும் பேரிழப்பாகும். அவர் தொடங்கிவைத்த இந்த அரிய மருத்துவ சேவை என்றென்றும் தொடரவும், அவரது ஆன்மா சாந்தி பெறவும் கல்கி குழுமம் மனப்பூர்வமாக இறைவனை வேண்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com