பிரபல ஜெமினி சர்க்கஸ் நிறுவனர் சங்கரன் காலமானார்!

பிரபல ஜெமினி சர்க்கஸ் நிறுவனர் சங்கரன் காலமானார்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சர்க்கஸ் கலையின் முன்னோடியும், ஜெமினி சர்க்கஸின் நிறுவனருமான. 'ஜெமினி சங்கரன்' நேற்று ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. வயது மூப்பின் காரணமாக சென்ற சில தினங்களாகவே உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெமினி சங்கரன் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.

சங்கரனின் மறைவுக்கு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தமது இரங்கலைத் தெரிவித்து இருக்கிறார். அந்த இரங்கலில் அவர், ’’வெளிநாட்டுக் கலைஞர்களின் திறமைகளை உள்ளடக்கி இந்திய சர்க்கஸ் கலையை நவீனமயமாக்குவதில் சங்கரன் முக்கியப் பங்கு வகித்தார். அவரது இழப்பு நாட்டுக்கும் சர்க்கஸ் கலைக்கும் பேரிழப்பு ஆகும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

மறைந்த ஜெமினி சங்கரன் குடியரசுத் தலைவர்கள் பலரிடமும், பிரதமர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஜெமினி சங்கரன்' என அறியப்படும் சங்கரன், 1924ம் ஆண்டு பிறந்தார். தற்காப்புக் கலைகள், ஜிம்னாஸ்டிக் போன்றவற்றில் பயிற்சி கொடுத்துவந்த கீலெரி குஞ்சிக் கண்ணனிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர், ராணுவத்தில் இணைந்து இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஓய்வு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு சர்க்கஸ் கம்பெனிகளுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, 1951ம் ஆண்டு விஜயா சர்க்கஸை வாங்கி அதற்கு, ’ஜெமினி சர்க்கஸ்’ என்று பெயர் வைத்தார். பின்னர் அவரே தனது இரண்டாவது சர்க்கஸ் கம்பெனியான, ’ஜம்போ சர்க்கஸ்’ கம்பெனியைத் தொடங்கினார். சர்க்கஸ் கலைக்கு சங்கரன் ஆற்றியிருக்கும் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக மத்திய அரசு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தது. மறைந்த சங்கரனுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சங்கரனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவரது இறுதிச்சடங்கு நாளை செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம் பையம்பலம் கடற்கரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com