சரத்பாபு நலமுடன் இருக்கிறார் வதந்திகளை நம்ப வேண்டாம் சகோதரி விளக்கம்!

சரத்பாபு நலமுடன் இருக்கிறார் வதந்திகளை நம்ப வேண்டாம்  சகோதரி விளக்கம்!
Published on

நடிகர் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் தவறானவை என்று அவரது சகோதரி விளக்கமளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்த சரத்பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத்பாபு. தமிழ் திரைத்துறையின் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் 1971 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான சரத் பாபு சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மட்டும் இன்றி கன்னடம், இந்தி , மலையாள படங்களிலும் சரத் பாபு நடித்துள்ளார். 90 களில் ரஜினிகாந்த் மற்றும் சீரஞ்சீவி உடன் சரத் பாபு நடித்த படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சரத்பாபு நடித்துள்ளார். அண்மையில் பாபிசிம்ஹா நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை படத்திலும் சரத் பாபு நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் முதலில் அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது. உடல் நலம் தேறிய பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். பிறகு மீண்டும் உடல் நலப் பதிவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் இன்று நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்திகள் அனைத்தும் தவறானவை என்று அவரது சகோதரி விளக்கமளித்துள்ளார்.

நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்த அவர், “சமூக வலைதளங்களில் சரத்பாபு பற்றி தவறாக செய்திகள் வருகின்றன. சரத்பாபு சற்று குணமடைந்துள்ளதால், அவரது அறை மாற்றப்பட்டுள்ளது. சரத்பாபு விரைவில் பூரண குணமடைந்து மீடியாக்களிடம் பேசுவார் என்று நம்புகிறேன். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com