ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சரத்குமார் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சரத்குமார் வலியுறுத்தல்

கில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஏழாவது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் ஆர். சரத்குமார் ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில் கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சி வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு, ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவர் பேசியதிலிருந்து: 

        “ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கவர்னர் நிராகரித்து இருக்கக்கூடாது. அதைச் சட்டமாக்க அவர் உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்திருந்தேன். நான் மட்டும் அதில் நடிக்கவில்லை. பலரும் நடித்துள்ளனர்.

     சூதாட்டத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சூதாட்டத்துக்கான தடை  சட்டமாக்க வேண்டும் என்று இப்போது நான் உறுதியாக கூறுகிறேன். டாஸ்மாக் வருமானத்தை வைத்துதான் அரசாங்கம் நடக்கிறதா என்றால் இல்லை.  மணல் மற்றும் கிரானைட் நிறுவனங்களை அரசு ஏற்று நடத்தினாலே அதிகமான வருமானம் கிடைக்கும். அதை ஏன் தனியாரிடம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

      முதலில் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணிக்கு திறந்து 10 மணிக்கு மூடவேண்டும் இப்படிச் செய்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூட இது உந்துதலாக இருக்கும். ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டுச் செல்லும் போது அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் நல்ல திட்டங்களாக இருந்தால் அதை பின்வரும் ஆட்சியாளர்கள் தொடர வேண்டும். மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

     வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறினேன். அப்போது பலரும் என்னிடம் ஏன் இது போன்று கூறுகிறீர்கள் என்று கேட்டனர். அப்படிச் செய்தால், வட மாநிலத்தவர்கள் இங்கு தவறு செய்துவிட்டு சென்றால் அவர்களைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட பதிவு செய்துகொள்வது நல்லது. அரசியல் சட்டப்படி யார் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அதற்குத் தடை விதிக்க முடியாது” இவ்வாறு சரத்குமார் கூறினார். 

         ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யக் கோரி சரத்குமார் மட்டுமல்ல, சமூகநலன் கொண்ட அனைத்து மக்களும் விரும்புகிறார்கள். அரசுகள் கவனித்தால் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com