சர்தார் வல்லபாய் படேலின் 147வது பிறந்த தினமான இன்று (அக்.,31) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. டில்லியில் சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சர்தார் வல்லபாய் படேலின் அயராத உழைப்பும், இந்தியாவை இணைக்க மேற்கொண்ட இடைவிடாத முயற்சியும், அவருக்கு இந்தியாவின் இரும்பு மனிதர் என்கிற நற்பெயரை பெற்று தந்தது.
குஜராத் மாநிலத்தில், அக்., 31, 1875ல், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார், சர்தார் வல்லபாய் படேல். மத்திய அரசு அவரின் பிறந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின், சர்தார் வல்லபாய் படேல், துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் . தனது வாழ்வில் அரை நுாற்றாண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வந்தவர் சர்தார் வல்லபாய் படேல்.