ராமர் கோயில் திறப்புவிழா நாளில் மதநல்லிணக்கப் பேரணி: மம்தா பானர்ஜி!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

யோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு மேற்கொண்டுவருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படாத நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கத்திலேயே அவசர அவசரமாக ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை சோனியா, ராகுல், கார்கோ உள்ளிட்ட தலைவர்களைப் போலவே திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ம்ம்தா பானர்ஜியும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயிலைத் திறப்பது பா.ஜ.க.வின் தேர்தல் நாடகம் என்று அவர் விமர்சித்துள்ளார். 'ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை வைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆதாயம் அடையப்பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்வைத்து பெரும் அரசியல் நடத்தப்படுகிறது. பா.ஜ.க தலைவரும், மேற்கு வங்க சட்டப்பேரவை  எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, 'என்னுடைய தொகுதியான நந்திகிராமலிருந்து ஒவ்வொரு மாதமும் 100 பேர் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்வார்கள். இதன் மூலம் மேற்கு வங்கத்தில் விழிப்புணர்வு ஏற்படும்' என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க-வின் மேற்கு வங்க மாநில செய்தித்தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா,  'ராமருக்கு எதிரான, பகவத் கீதைக்கு எதிரான, இந்தியாவின் கலாசார பாரம்பர்யத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மம்தா பானர்ஜி எடுத்திருக்கிறார். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு சமிக்ஞை காட்டவே இத்தகைய நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறார்.

அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயம்
அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயம்

பகவான் ஸ்ரீராமர் எந்தவொரு கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்பதால், ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, முதல்வர் மம்தா பானர்ஜி தனது வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.

இந்த சூழலில்தான், ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் நாளில், மேற்கு வங்கத்தில் மதநல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். 'தலைநகர் கொல்கத்தாவில் காளி கோவிலில் பூஜை நடத்திய பிறகு, அங்கிருந்து மதநல்லிணக்கப் பேரணி தொடங்கும். ஹசரா முதல் பூங்கா விளையாட்டு மைதானம்வரை பேரணி செல்லும். பின்னர், அங்கு கூட்டம் நடைபெறும்' என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

மேலும், 'மதநல்லிணக்கப் பேரணி செல்லும் வழிகளில் அமைந்திருக்கும் மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள், கோயில்கள் ஆகியவற்றில் வழிபாடுகள் நடத்தப்படும். இந்தப் பேரணியில் பங்கேற்க வாருங்கள் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்' மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணித்தால், இந்து விரோதி என்ற பிரசாரத்தை தனக்கு எதிராக பா.ஜ.க கட்டவிழ்த்துவிடும் என்று கருதும் மம்தா பானர்ஜி, இந்துக்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினரையும் மதச்சார்பற்ற கொள்கை கொண்டவர்களையும் தன் பக்கம் திருப்பும் முயற்சியாக மதநல்லிணக்கப் பேரணியை நடத்த முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com