

தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாக திருமதி சசிகலா புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தினம் தினம் புதிய திருப்பங்கள் அரசியல் களத்தில் நடந்தேறி வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த செல்வி. ஜெயலலிதாவின் உற்ற தோழியாக இருந்தவர் சசிகலா. அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்து அதிமுகவில் சசிகலா ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
அதிமுகவில் யாருக்கு எந்த பொறுப்பு கொடுப்பது , யாருக்கு சீட் கொடுப்பது , கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் அனைத்தையுமே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரே செய்து வந்தனர். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் , முதல்வர் பதவியை ஏற்கும் தருணத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். சிறைக்கு செல்லும் முன்னர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியில் அமர்த்தி விட்டு சென்றார்.
சசிகலா சிறையிலிருந்து திரும்பும் முன்னரே அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிக் கொண்டார். சசிகலாவின் உறவினரான தினகரன் , திவாகரன் , வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரையும் , அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருது நீக்கினார்.
தமிழகத்தில் தற்போது சட்டமன்ற வேலைகள் பரபரத்து வருவதால் சசிகலா புதிய கட்சியை தொடங்கும் முடிவை எடுத்தார். கடந்த மாதம் பிப்ரவரி 24-ம் தேதி, ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் புதிய கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். அடுத்த சில தினங்களில் கட்சியைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் இன்று(மார்ச்.13) தனது புதியக் கட்சியின் பெயரையும் , கட்சி சின்னத்தையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். அவரது கட்சியின் பெயர் 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' (APMMK) என்பதாகும். மேலும் தென்னந்தோப்பு சின்னத்தினை கட்சியின் சின்னமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பேசிய சசிகலா "திமுக அரசு தமிழக மக்களை வரிகளாலும் விலைவாசி உயர்வினாலும் கசக்கி பிழிந்து கொண்டு வருகிறது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. தமிழக மக்களுக்கு விரைவில் ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும்" என்ற எண்ணத்தில் தான், தனது தொண்டர் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
நாங்கள் எப்போதும் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறோம். எங்களின் தென்னந்தோப்பு சின்னம் ஒரு கூட்டுக் குடும்பம் போல இருக்கிறது. இந்த சின்னம் மக்களுடைய சின்னம். ஒரு இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் , எங்கள் கட்சி வேட்பாளர்கள் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார்கள். தமிழக மக்களும் புதுச்சேரி மக்களும் எங்களுக்கு நிச்சயமாக ஆதரவு தருவார்கள் என்று சசிகலா பேசியிருந்தார். முன்னதாக அவர் பாமக நிறுவனர் ராமதாசை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசி இருந்தார். சசிகலா தலைமையில் பாமகவின் ராமதாஸ் அணி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.