காலநிலை மாற்றங்கள் ஏராளமான அறிவியல் அதிசயங்களை தோற்றுவிக்கின்றன , அந்த அதிசயங்கள் அபாயகரமாக கூட மாறலாம். அப்படி ஒரு அதிசயமாக கடும் பாலைவனமான சவூதி அரேபியாவில் பனிமழையாக பொழிய தொடங்கியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலும் தகிக்கும் சுடுமணலும் நிறைந்த சவுதி அரேபியாவின் பாலைவனங்கள், இன்று சுவிஸ்லாந்தை போல் பனி போர்த்திய பிரதேசமாக மாறி வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு , இந்த வருடம் அதிகளவில் பனிப்பொழிவை சவூதி அரேபிய பாலைவனம் அனுபவித்து வருகின்றது. கடந்த ஆண்டு அரேபியாவின் அல்-ஜாஃப் பகுதியின் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பெய்த கடும் பனி, இந்த ஆண்டு மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. வறண்ட வானிலையைக் கொண்ட நிலப்பரப்பாகக் காணப்படும் அல்-ஜாஃப் பகுதியின் உட்புறப் பாலைவனங்கள், வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கு பனிப்பொழிவைச் சந்தித்துள்ளன.
வறண்ட மணல் குன்றுகளாக காட்சியளித்த பகுதிகள் இப்போது பனிப்பகுதிகளாக மாறியுள்ளன. வெள்ளைப் பனிகளுக்கு மத்தியில் ஒட்டகங்களும் , பாலைவன விலங்குகளும் காணப்படுவது இயற்கையின் விசித்திரங்களில் ஒன்று. ஓட்டகம் பாலைவனத்தில் மட்டுமல்ல பனியிலும் வாழும் அளவிற்கு உடல் தகவமைப்புகளைப் பெற்றுள்ளது. கடும் பனிப்பொழிவுகள் தபூக், ஜபல் அல்-லாஸ், ஹைல் போன்ற சவூதியின் வடக்குப் பகுதிகள் மட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எல்லையோர மணல் குன்றுகள் வரை பரவியுள்ளது.
ரியாத்தின் வடக்குப் பகுதிகளான அல்-காட் மற்றும் காசிம் பகுதிகளில் வெப்பநிலை -4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து , அப்பகுதி மக்களைக் கடும் குளிரில் நடுங்க வைத்துள்ளது . மத்திய தரைக் கடலில் இருந்து வீசிய அதீத குளிர்ந்த காற்று மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே , இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்:
கொளுத்தும் வெயிலையும் , சூடான காற்றையும் மட்டுமே பார்த்த அரேபியர்களுக்கு , புதிய பனிப் படலங்கள் ஆச்சர்யத்தை தருகின்றன. உள்ளூர் வாசிகள் மற்றும் அண்டைப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கூட்டம் கூட்டமாக இந்த அதிசயத்தினை பார்க்க வருகை தருகின்றனர். அந்த இடங்களில் சிறிய பனிச்சறுக்கு விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
வானிலை ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
வானிலை ஆய்வாளர்கள் இதை , உலகளாவிய காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கின்றனர். துருவப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், காற்றோட்டப் பாதையை மாற்றி வறண்ட பகுதிகளுக்கு மழையையும் குளிரையும் கொண்டு வருகின்றன. இத்தகைய பனிப்பொழிவு இந்த மாதத்தையும் கடந்து பிப்ரவரி வரை நீடிக்கலாம் என்று கணித்துள்ளனர்.
குர்ஆனில் கூறப்படும் நிகழ்வா?
பாலைவனத்தில் பனிப்பொழிவு அதிசயமாக இருந்தாலும் , இந்த நிகழ்ச்சியை அரேபியர்கள் வேறு விதமாகவும் பார்க்கின்றனர். இஸ்லாமிய மத நூலில் " இறுதி நாளுக்கு(கயாமத்) முன்பாக அரேபியப் பாலைவனங்கள் ஒருநாள் பசுமையாகவும், நதிகள் ஓடும் இடமாகவும் மாறும் " என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அரேபியா பசுமையாக மாறுவதற்கு முன் அடையாளமாக இது இருக்கலாம் என்று அரேபியர்கள் விவாதிக்கின்றனர்.