இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் (SBI) இந்தியாவில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தங்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக மே 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அகில இந்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர் கூட்டமைப்பு (AISBISF) தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்கள் நாடு தழுவிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து வரும் மே 23-ம்தேதி இரண்டாவது சனிக்கிழமையாகவும், மே 24-ம்தேதி ஞாயிற்றுக் கிழமையாகவும் வருவதால் எஸ்பிஐ கிளைகள் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே இந்த வேலைநிறுத்தத்திற்கான முக்கிய காரணம் ஆகும்.
பணி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடிய தற்போதுள்ள கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்,
பணி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடிய தற்போதுள்ள கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும், நீண்ட காலமாக தங்கள் தரப்பில் முன்வைக்கப்படக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஊழியர்கள் அமைப்பு கூறியுள்ளது. தங்களுடைய கோரிக்கைகளை பலமுறை வங்கி நிர்வாகத்திடம் முன் வைத்தபோது அதற்கு தீர்வு கிடைக்காத நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
மேலும் கூட்டமைப்பு நிர்வாகத்திற்கு 16 அம்சக் கோரிக்கை கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. அதன் சில முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
* நிரந்தர வேலைகளை வெளிப்பணியமர்த்துவதற்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட வேண்டும்.
* சம்பளப் பாகுபாடு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
* NPS ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதி மேலாளரை மாற்றும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
* ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடங்கப்பட வேண்டும்.
* 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு 'வட்டங்களுக்கு இடையேயான இடமாற்றம்' செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
* குறுக்கு விற்பனை (தவறான விற்பனை) என்ற பெயரில் ஊழியர்கள் மீது கொடுக்கப்படும் அழுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.
- எனவே மே 23, 24, 25, 26 ஆகிய நான்கு நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கிகள் இயங்காது என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருப்பது நல்லது.