தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் - உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Supreme Court
Supreme Court
Updated on

2023-ஆம் ஆண்டு திமுக அரசு ஆன்லைன் சூதாட்ட தடைசட்டத்தை இயற்றியது. இதை எதிர்த்து, இந்த வகை விளையாட்டுகளை அளித்துவரும் பல்வேறு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தன.

மாநில அரசுகளுக்கு ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யும் அதிகாரம் இல்லை என தங்களின் வாதத்தை விளையாட்டு நிறுவனங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு கொண்டு வந்த ஆனைலைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டது.அதேபோன்று கர்நாடகா அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்தையும் அம்மாநில உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்றங்களின் இந்த அதிரடி தடைகளை எதிர்த்து தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளின் இறையாண்மையையும் பொது மக்கள் நலனையும் நிலைநிறுத்தும் வகையில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் முற்றிலும் செல்லும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இரு மாநில உயர் நீதிமன்றங்கள் விதித்த தடை உத்தரவுகள் தவறானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையே, இணைய வழி விளையாட்டுகளுக்கு மத்திய அரசு விதித்த ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து தனியார் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த மற்றொரு முக்கிய வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த 2023-இல் வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்வது கட்டாயம் என்றும், இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி (GST) வரி விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் இறுதி விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விளையாட்டு நிறுவனங்களுக்கு பேரிடியாக அமையும் அதிரடித் தீர்ப்பை வழங்கியது. பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவை சாதாரண வணிக செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை எனக் கருதப்படுவதால், அத்தகைய செயல்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்கு எந்தவொரு அடிப்படை உரிமையையும் விளையாட்டு நிறுவனங்கள் கோர முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், இணைய வழி விளையாட்டுகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு முற்றிலும் செல்லும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அன்பு உடன்பிறப்புகளே..! – மு.க.ஸ்டாலின் பதிவு
Supreme Court
logo
Kalki Online
kalkionline.com