
இந்தியாவிலேயே தமிழ்நாட்டுப் பள்ளிகளில்தான் முதன்முறையாக காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் காலை உணவுத் திட்டத்தைக் கண்காணிக்க தமிழ்நாடு அரசு சார்பில், ‘சி.எம்.13 எப்.எஸ்.’ என்ற புதிய செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த செயலி மூலம் மாணவர்களுக்கு நேரத்துக்கு உணவு வழங்கப்படுகிறதா? அறிவிக்கப்பட்ட உணவு முறை சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கவும் முடியும். முக்கியமாக, இந்தத் திட்டத்தில் காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகளை முடிக்க வேண்டும். இதையும் இந்த செயலி மூலம் கண்காணிக்க முடியுமாம். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் மொத்தம் 33.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாட்டு பள்ளிகள்தான் இந்தியாவிலேயே முன்னோடி. பிற மாநிலங்களில் மதிய உணவுத் திட்டமே இன்னும் முழுமை பெறாத நிலையில், தமிழ்நாடு அரசு காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. கடந்த வருடம் மே மாதம் 7ம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப் பள்ளிகளில் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 1,543 பள்ளிகளில், 1,319 பள்ளிகளில் மாணவ, மாணவியரின் வருகைப் பதிவு அதிகரித்து உள்ளது. மாநிலத் திட்டமிடல் துறை சார்பாக எடுக்கப்பட்ட சர்வேயின்படி இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை நூறு சதவிகிதமாக உள்ளது. குறிப்பாக, 1,086 பள்ளிகளில் வருகை 20 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் 22 பள்ளிகளில் 40 சதவிகித அளவுக்கு வருகைப் பதிவு உயர்ந்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு 12.71 ரூபாய் வரை ஒரு நாளுக்குச் செலவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, திங்கட்கிழமையில் ரவா உப்புமாவோடு காய்கறி சாம்பார் அல்லது சேமியா உப்புமாவோடு காய்கறி சாம்பார் அல்லது கோதுமை ரவா உப்புமாவோடு காய்கறி சாம்பார். செவ்வாய்க்கிழமையில் ரவா கிச்சடி, சேமியா கிச்சடியோடு காய்கறி அல்லது சோளக் கிச்சடி அல்லது கோதுமை ரவா கிச்சடியோடு காய்கறி. புதன்கிழமையில் ரவா பொங்கலுடன் காய்கறி சாம்பார் அல்லது வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார். வியாழக்கிழமையில் சேமியா உப்புமாவுடன் காய்கறி சாம்பார் அல்லது அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார் அல்லது ரவா உப்புமாவுடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமாவுடன் காய்கறி சாம்பார் கொடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமையில் ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் செவ்வாய்க்கிழமை உணவு வகையின்படி ரவா கேசரி, சேமியா கேசரியும் வழங்கப்படும்.
இந்தக் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.