செஞ்சியில் அதிர்ச்சி: சாக்லேட் சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

சாக்லேட் சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
சாக்லேட் சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!Source:twitter
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

செஞ்சியில் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட காலாவதியான சாக்லேட்டுகளை சாப்பிட்ட மாணவ மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி விழுப்புரம் சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு பிறந்தநாள். அதையொட்டி அந்த மாணவி தனது பெற்றோருடன் சென்று அருகில் உள்ள ஒரு கடையில் சாக்லேட்களை வாங்கியுள்ளார். வழக்கம் போல் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பறையில் இருந்த சக மாணவ மாணவிகளுக்கு சாக்லேட்டுகளைக் கொடுக்க, அந்த சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவ மாணவிகளுக்கு (8 மாணவர்கள், 10 மாணவிகள்) வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதை சாப்பிட்ட மாணவ மாணவிகள் சுருண்டு விழுவது கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட 18 மாணவர்களும் உடனடியாக செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த இந்த எதிர்பாராத உணவு நச்சுத்தன்மை(food poisoning) காரணமாக மாணவர்களுக்கு சாக்லேட் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டதாகவும், சில மாணவர்கள் மயங்கியும் விழுந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு சக வகுப்பு தோழர்களுக்கு வழங்கிய சாக்லேட் ஓராண்டுக்கும் மேலாக காலாவதியானது (expired) என்பது தெரிய வந்துள்ளது. அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மாணவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. செஞ்சி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலாவதியாகி ஓராண்டுக்கு மேலாகியும் அந்த சாக்லேட்டுகளை கடையில் வைத்து பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் விற்பனை செய்து வந்து, குழந்தைகளின் உயிருடன் விளையாடிய கடை உரிமையாளர் மீது போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் கடுமையான பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் கடையில் இருந்த இதர காலாவதியான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சாக்லேட் கெட்டுவிட்டதை அறிவது எப்படி? மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள்

அனைத்து சாக்லேட்களும் காலாவதி தேதி முடிந்தவுடன் உடனடியாக நச்சாவதில்லை. ஆனால் சாக்லேட்டின் மேல் வெள்ளை, கருப்பு நிறப் புள்ளிகள் அல்லது பூஞ்சை படிந்திருந்தால் அதை சாப்பிடக்கூடாது. சாக்லேட்டின் நறுமணம் மாறி புளித்த அல்லது ரசாயன வாசனையடித்தால் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பாக்டீரியா மற்றும் உணவு நச்சுத்தன்மை:

பழங்கள் அல்லது பால் போன்ற பொருட்கள் நிரப்பப்பட்ட சாக்லேட்டுகள் கெட்டுப்போக அதிக வாய்ப்புள்ளதால் அவை தீவிரமான உடல்நலக் குறைபாடுகளை உருவாக்கலாம். சாக்லேட்டுகளில் உள்ள பால் அல்லது கிரீம் போன்ற பொருட்கள் கெட்டுப் போகும்போது பாக்டீரியாக்கள் வளரத் தொடங்கும். இதனால் வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனகள் உண்டாகும்.

செரிமான கோளாறுகள்:

சாதாரண சாக்லேட்டுகளில் உள்ள கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கெட்டுப் போகலாம். இதனால் துர்நாற்றம் அல்லது புளிப்பு சுவை ஏற்பட்டு வயிறு தொடர்பான உபாதைகள் உண்டாக்கலாம்.

காலாவதியான சாக்லேட்களில் கொழுப்பு பொருட்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதால், அஜீரணம் மற்றும் வயிற்று மந்தம் ஏற்படலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மனிதநேயம் இன்னும் சாகல! கைவிடப்பட்ட நிலையில் தமிழ் நடிகர்... ஓடி வந்து உதவிய அமைச்சர் ராஜ்மோகன்..!
சாக்லேட் சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Disclaimer : இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்
logo
Kalki Online
kalkionline.com