

உலகமும் முழுவதும் மருத்துவம், அறிவியல் போன்ற பலதுறை சார்ந்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் நடத்தி பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர். புற்றுநோய்க்கு மருந்து, செயற்கை மூளை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சமீபத்தில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரிய நிகழ்வை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பொதுவாக செடி, கொடிகள் உட்பட அனைத்து தாவரங்களும் உயிர் உள்ளது என்றும் அவற்றால் சுவாசிக்க முடியும் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் தாவரங்கள் சுவாசிப்பதை எந்த விஞ்ஞானிகளும் இதுவரை பார்த்ததும் இல்லை, நிரூபித்தது இல்லை. ஆனால் தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள், முதல்முறையாக தாவரங்கள் சுவாசிக்கும் அதிசய நிகழ்வை லைவ் வீடியோவாக வெளியிட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.
பொதுவாக, தாவரங்களின் இலைகளில் ஆயிரக்கணக்கான சிறிய துளைகள் இருக்கும். தாவரங்கள் அந்த இலைகளில் உள்ள 'ஸ்டோமாட்டா' (Stomata) எனப்படும் நுண்துளைகள் வழியாகச் சுவாசிக்கின்றன.
அதாவது இதன் வழியாகத்தான் தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி கொண்டு, தேவையான ஆக்சிஜனையும், நீரையும் வெளியே விடுகின்றன..
இதுவரை யாரும் அதை நேரில் பார்த்ததில்லை. ஆனால், ஆக்சிஜனை தாவரங்கள் வெளியே விடும் அந்த அரிய காட்சியைதான், தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் லைவ் வீடியோவாக பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்தான் 'ஸ்டோமாட்டா இன்-சைட்' என்ற புதிய கருவியை உருவாக்கி உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
அதிநவீன Confocal microscope, Machine Learning மென்பொருள் ஆகியவற்றை இணைத்து இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம், தாவரங்கள் வெயில் அதிகமானபோது அல்லது ஈரப்பதம் குறைந்தபோது நீரிழப்பை குறைக்க தாவரங்கள், தங்களின் துளைகளை மூடிக்கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்தக் கருவி, தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்காகக் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும்போதும், அதே நேரத்தில் Transpiration மூலம் நீரை வெளியேற்றும்போதும் இலைத் துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. சுமார் 5 ஆண்டுகள் கடின உழைப்பால் இந்த அரிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன..
அடுத்தக்கட்டமாக விஞ்ஞானிகள் பல்வேறு மரங்கள், செடிகள் எப்படி சுவாசிக்கின்றன என்ற சுவாச முறைகளை விரிவாக ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை திகைப்பில் ஆழ்த்தி உள்ளதுடன், விஞ்ஞானிகளின் சாதனையை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கிறது...!!