514/600 மதிப்பெண் பெற்றும் 4 பாடங்களில் தோல்வி என வந்த முடிவு! +2 தனித் தேர்வருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

514/600 மதிப்பெண் பெற்றும் 4 பாடங்களில் தோல்வி என வந்த முடிவு! +2 தனித் தேர்வருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

தமிழகம் முழுவதுமாக மக்கள் வெகு ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்தன. அதில் பல மாணவ மாணவிகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக மதிபெபெண்களைப் பெற்று தாங்கள் பயின்ற பள்ளிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் சில எதிர்மறையான விஷயங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால் சில இடங்களில் மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. இப்போது மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரு மாணவிக்கு கிடைத்த தேர்வு முடிவு பட்டியல் மாணவியை மட்டுமல்ல மொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், இவரது மனைவி ஆர்த்தி. இவர் தனது 17 ஆம் வயதில் மதுரை சீதாலட்சுமி பள்ளியில் 11 ஆம் வகுப்பு முடித்திருந்தார். பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக வேல்முருகனுக்கும், ஆர்த்திக்கும் திருமணம் நடந்திருக்கிறது. பிறகு 2023 ஆம் ஆண்டில் ஆர்த்தி, தனது 11 ஆம் வகுப்பு முடித்த சான்றிதழைக் காட்டி திருப்பரங்குன்றம் தேவஸ்தானப் பள்ளி சார்பில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை தனித்தேர்வராக எதிர்கொண்டிருக்கிறார். அதன்படி கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி திருமங்கலம் செயிண்ட் பிரான்சிஸ் பள்ளியில் தேர்வு எழுதி இருந்தார்.

இந்நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஆர்த்தியும் அவரது கணவர் வேல்முருகனும் ஆன்லைனில் வெளிவந்திருந்த தேர்வு முடிவுகளைக் கண்டு அதிர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆன்லைனில் வெளியான மதிப்பெண் பட்டியலில், ஆர்த்தி ஆங்கிலத்தில் 100 க்கு 92 மதிப்பெண்களும், தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்களும், கணிதத்தில் 100 க்கு 56 மதிப்பெண்களும், இயற்பியலில் 100 க்கு 75 மதிப்பெண்களும் வேதியியலில் 100 க்கு 71 மதிப்பெண்களும் பெற்றதாக வெளியாகியிருக்கிறது.

தமிழ் பாடத்தைப் பொருத்தவரை மாணவர்கள் தேர்வு எழுதுவதே 90 மதிப்பெண்களுக்கு மட்டும் தான். மீதமிருப்பது இண்டர்னல் மதிப்பெண்கள். ஆனால், மதிப்பெண் பட்டியலோ அதிர்ச்சிகரமான 138 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக வெளியாகி இருக்கிறது . இதைக் கண்டு குழப்பமும் அதிச்சியும் அடைந்த வேல்முருகன், ஆர்த்தி தம்பதியினர் சம்மந்தப்பட்ட பள்ளியான திருப்பரங்குன்றம் தேவஸ்தானப் பள்ளிக்குச் சென்று இது குறித்து புகார் தெரிவித்த போது தேவஸ்தானப் பள்ளி உரிய பதிலை அளிக்கவில்லை என்று தெரிகிறது .

தேர்வில் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி உண்மையிலேயே தான் பெற்ற மதிப்பெண்கள் என்ன என்பது தெரிந்தால் மட்டுமே தன்னால் உயர்கல்வி கல்வி கற்க முடியும் என்பதால் தேர்வு முடிவுகளால் பாதிக்கப்பட்ட மாணவி ஆர்த்தி மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவர் தனது 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை தனித்தேர்வராக எதிர்கொண்டார். நேற்று தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இவருக்கு கிடைத்த மதிப்பெண் பட்டியல் அவரை மிகக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

மாணவிக்கு கிடைத்த மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் அவருக்குத் தமிழ் பாடத்தில் 100 க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மொத்த மதிப்பெண்கள் 600 க்கு 514 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக அந்தப் பட்டியல் தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல, இத்தனை மதிப்பெண்கள் பெற்றும் மாணவி 4 பாடங்களில் தோல்வி அடைந்திருக்கிறார் என்றும் அந்தப் பட்டியல் காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com