கடல்நீர் கரையைத் தாண்டி வந்ததால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகத்தான் இருக்கும். தனுஷ்கோடியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கடலை ரசித்துவிட்டு செல்வார்கள். இந்தநிலையில் அந்தப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று மாலை 4 மணியிலிருந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து கடல் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கியும் சாலை வரையிலும் வந்தது. அதேபோல் மாலை 5 மணியளவில் எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரையிலிருந்து அரிச்சல் முனை வரை சுமார் 10 கிமீ தூரம் வரை கடல் நீர் சூழ்ந்துவிட்டது.
தனுஷ்கோடியில் இதற்கு முன்னர் புயலால் சேதமடைந்த கட்டடம் வரை நீர் புகுந்துவிட்டது. இந்த சீற்றத்தால் தடுப்புச் சுவர்கள் மற்றும் சாலைகள் ஆகியவை சேதமடைய வாய்ப்பு இருக்கிறது என்று மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த கடல்நீர் சீற்றத்தால் கடலிலுள்ள நிறைய நண்டுகள் கரைக்கு வந்துவிட்டன. அதேபோல் கடலில் உள்ள பாசிகள் மற்றும் தாழை செடிகள் போன்றவையும் பல இடங்களில் தேங்கி நிற்கின்றன.
தனுஷ்கோடியில் நேற்று மாலை ஏற்பட்ட இந்தக் கடல் சீற்றம் காலையில் இன்னும் தீவிரமாக இருந்ததால் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்து வருகின்றன. 5 அடி உயரம் வரை அலை எழுகிறது என்பதால் சுற்றுலா பயணிகளுக்கும் மீனவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனுஷ்கோடியில் உள்ள உள்ளூர் மீனவர்கள் மட்டும் தனுஷ்கோடிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் இதுகுறித்து ஒரு மீனவர் பேசுகையில், “இப்போது கடல் சீற்றத்தால் கடல்நீர் கரையைத் தாண்டி வந்துள்ளது. கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளை கடல்நீர் இழுத்துச் சென்றுவிட்டது. அதனை பல முயற்சிகள் செய்து தடுப்புச் சுவர் பகுதிக்கு கொண்டு வந்து வைத்திருக்கிறோம்.” என்று பேசினார்.
பொதுவாக கடல் சீற்றம் கொள்ளும்போது சூராவளி காற்றும் வீசும். ஆனால் தற்போது கடல் மட்டுமே சீற்றமாக உள்ளது. சிறிதளவு கூட காற்று வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.