மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ளது அருள்மிகு தர்மராஜா, திரௌபதி அம்மன் திருக்கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கோயிலில்  கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த சிலர் அந்தக் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்று இருக்கிறார்கள். அப்போது அவர்களை சாமி கும்பிட கோயிலுக்குள் அனுமதிக்காமல் ஒரு பிரிவினர் தடுத்து நிறுத்தியதோடு, மிரட்டியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனையடுத்து, அப்பகுதி பட்டியலின மக்கள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று இருக்கிறார்கள். இதையறிந்த அமைச்சர் பொன்முடி, போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்து இருக்கிறார். இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த மக்கள் கோயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அங்கு சென்றபோது, அவர்கள் தங்களது சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விஷயம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ‘பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம்’ எனக் கூறி அங்கிருந்த சிலர் தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். காவல் துறையினர் நடத்திய  பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இரு தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், காவல் துறையின் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் யாரும் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் திரௌபதி அம்மன் கோயில் நடையை சாத்தி சீல் வைத்து இருக்கின்றனர். கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதனால்  மேல்பாதி கிராமத்தில் வடக்கு மண்டல ஐஜி தலைமையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com