

2026 சட்டமன்ற தேர்தல் முடிந்து வரலாறு காணாத வெற்றி பெற்று , தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தல் முடிவுகளில் திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடமும் பெற்று பின்னடைவை சந்தித்தன. கருத்துக் கணிப்புகள் பலவும் திமுக வெற்றி பெறும் என்று கூறியிருந்தாலும் , மே தினத்தன்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் , அதில் கலந்து கொண்ட திமுக முக்கிய தலைவர்கள் அனைவரும் மிகவும் சோகத்துடன் காட்சி அளித்திருந்தனர்.
தேர்தல் முடிவில் ஆட்சியில் இருந்த திமுக தோல்வியை தழுவி உள்ளது. இந்த தேர்தலில் திமுகவின் நீண்ட காலம் தோல்வி அடையாமல் இருந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அமைச்சர்களும் தோல்வி பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்களான அன்பில் மகேஷ் , டிஆர்பி. ராஜா , மா. சுப்பிரமணியன், கீதா ஜீவன், துரைமுருகன் , பழனிவேல் தியாகராஜன் , பெரிய கருப்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
இவர்களை எல்லாம் தாண்டி திமுகவின் தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார் . எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட திமுக தலைவர் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தது இல்லை. ஆனால், இந்த முறை பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் செல்வாக்கு பெற்ற தலைவர்களுக்கு தவெக அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி. எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை 8000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதற்கு முன்னர் சில சட்டமன்ற தேர்தல்களில் தனது தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்து இருந்தாலும் , திமுக தலைவரான பின்னர் இதுவே முதல்முறை.
கொளத்தூர் தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இன்று மாலையில் திமுக தலைவர் ஸ்டாலின் , முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உடன் கொளத்தூர் தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திறந்த பிரச்சார வாகனத்தில் சென்று தொகுதி மக்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் இரு பகுதிகளிலும் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காட்சியளித்தனர். அவர்களிடம் ஸ்டாலின், தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி! என்று கூறியதும் கூட்டத்தில் உள்ள பல திமுக தொண்டர்கள் ஆழத் தொடங்கினர்.
திமுக தொண்டர்கள் அழுவதை பார்த்த அங்கு கூடியிருந்த மக்களும் அழ தொடங்கினார்கள். இதனால் , அந்தப் பகுதியே ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தார்கள். இதனை பார்த்த சேகர் பாபுவும் , ஸ்டாலின் பின்னால் நின்றுக் கொண்டு அழத் தொடங்கினார். ஏராளமான தொண்டர்கள் அழுவதை கண்ட ஸ்டாலின் யாரும் அழக்கூடாது, என்று ஆறுதல் வார்த்தை கூறினார் , அங்கிருந்த தொண்டர்களையும் சமாதானப்படுத்தினார். தேர்தல் முடிந்த பின்னர் முதல் ஆளாக திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.