கேம்பஸ் இண்டர்வியூவில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவரா? இதப் படிங்க முதல்ல!

கேம்பஸ் இண்டர்வியூவில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவரா? இதப் படிங்க முதல்ல!

ஆள் சேர்க்கை குறித்து விப்ரோ நிறுவனம், அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. கேம்பஸ் இண்ட்ர்வியூ மூலமாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு தற்போது பயிற்சி வகுப்புகளில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தந்த ஆஃபரை மாற்றியிருக்கிறது.

நாடு முழுவதும் சென்ற ஆண்டு மட்டும் 17 ஆயிரம் மாணவர்களுக்கு விப்ரோ நிறுவனம் ஆஃபர் வழங்கியது. முன்னணி கல்லூரிகளில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆட்சேர்க்கை நடத்திய விப்ரோ நிறுவனம், அவர்களுக்கு தகுந்த பயிற்சியளித்த பின்பு பணியில் ஈடுபடுத்தப்போவதாகவும் ஆன்போர்டிங் திட்டத்தை அறிவித்தது.

இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 6.5 லட்ச ருபாய் அளிப்பதாக ஆஃபர் அளித்திருந்தது. ஆஃபரை ஏற்றுக்கொண்டு நிறுவனத்தில் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் ஆரம்பித்தது. தற்போது ஆஃபர் மதிப்பை குறைத்து, ஆண்டுக்கு 3.5 லட்சம் ருபாய் மட்டுமே தரமுடியும். இதற்கு ஒப்புக்கொண்டால் பணியில் அமர்த்தமுடியும் என்று தெரிவித்திருக்கிறது.

மாறி வரும் பொருளாதார சூழலில், ஆன்போர்டிங் திட்டங்களை அமல்படுத்துவதற்காக இப்படியொரு முடிவெடுக்க வேண்டியிருப்பதாகவும் உலகப்பொருளாதார சூழல், வாடிக்கையாளரின் தேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டுதான் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 3.5 லட்சம் மட்டுமே தரக்கூடிய நிலையில் இருக்கிறோம் என்று மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இமெயில் அனுப்பியிருக்கிறது.

புதிய ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டால், பழைய ஆஃபர் செல்லுபடியாகும். ஆனால், எப்போது பிராஜெக்டில் அமர்த்தப்படுவார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது. வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப பிராஜெக்டில் அமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக பணிக்கும் வரும் இளைஞர்களை இத்தகைய நடவடிக்கைகள் மனதளவில் பாதிக்கும் என்கிறார்கள், மனிதவள மேலாண்மை நிபுணர்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்படுவர்களை குறைந்த ஊதியத்தில் மட்டுமே நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றன. பின்னர் ஊதிய உயர்வும் தருவதில்லை என்கிற புகார் பரவலாக உள்ளது.

சரியாக செயல்படாத காரணத்தால் சமீபத்தில் 425 பேரை விப்ரோ நிறுவனம் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது. இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் பணிபுரியும் விப்ரோ நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்கிறார்கள். கடந்த மூன்றாண்டுகளாக இல்லாத ஆட்குறைப்பு நடவடிக்கைகள் கடந்த மூன்று மாதங்களாக உச்சத்தில் இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com