

காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக செல்வப் பெருந்தகை முடிவு செய்துள்ளார். இன்று பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து தனது ராஜினாமா முடிவுக்கு குறித்து பேசி உள்ளார். மல்லிகார்ஜுன கார்கே சிறிது காலம் பொறுத்து இருக்க கூறியதாகவும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பியதாகவும் , அப்போதே தனது ராஜினாமா முடிவு குறித்து பரிசீலிக்குமாறு மல்லிகார்ஜுன் கார்கேவிடம் பேசியதாகவும் , அவர் தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் தற்போது கசப்பான சம்பவங்கள் நடைபெறுகிறது. மாணிக்கம் தாகூர் எம்.பி மற்றும் ஜோதிமணி எம்.பி போன்றோர் கூறும் கருத்துக்கள் கசப்பான அனுபவத்தை தருவதாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகும் முன்னரே, திமுகவின் தலைமைக்கு நெருக்கமானவராக செல்ல பெருந்தகை இருந்து வந்துள்ளார். முதன் முதலில் புதிய தமிழகம் கட்சியில் இருந்த செல்வப் பெருந்தகை பின்னர், புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து அரசியலில் வளர்ச்சி பெற்றார். அதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில பொறுப்பை பெற்றார். அதன் பிறகு தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநில தலைவர் பதவியும் பெற்றார்.
சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தேசிய தலைமை விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ராகுல் காந்தி , கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் இந்த கூட்டணியை பெரிதும் விரும்பினர். பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணி தொடர்பாக விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை சந்தித்து ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
அந்த நேரத்தில் செல்ல பெருந்தகை காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த விஷயத்தில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மற்ற தேசிய நிர்வாகிகளை திமுக பக்கம் திருப்பியதில் செல்வப் பெருந்தகையின் பங்கு மிக அதிகம். திமுக கூட்டணி அமைய விடாமல் இருக்க மாணிக்கம் தாக்கூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் பொதுவெளியில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசி வந்தனர். ஒரு வழியாக அரை மனதுடன் திமுக – காங் கூட்டணி உறுதியானது. ஆனாலும் , கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி வரவில்லை.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்த பின்னர், உடனடியாக காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவளித்து கூட்டணி அரசிலும் பங்கு பெற்றது. ஆனாலும் செல்வப் பெருந்தகை புதிய கூட்டணியில் ஒட்டாமல் இருந்துள்ளார். சமீபத்தில் அவரது மகளின் திருமணத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எந்த ஒரு பெரிய தலைவர்களும் வரவில்லை.
சோனியா காந்தி , மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி , தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அதே நேரம் திமுகவிலிருந்து அதன் தலைவர் ஸ்டாலின் , கனிமொழி, டி. ஆர்.பாலு , பொன்முடி உள்ளிட்ட முன் வரிசை திமுக தலைவர்கள் அனைவருமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தற்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ள செல்வபெருந்தகை, விரைவில் திமுகவில் சேரலாம் என்பதை போன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பற்றிய அதிகாரப் பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.