

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் அமையவிருந்த சர்வதேச தரத்திலான “குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி” (Global Sports City) திட்டத்துக்காக வழங்கப்பட்ட ₹205.89 கோடி மதிப்பிலான முதற்கட்டப் பணி ஆணையை (Work Order) தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்துள்ளது தவெக அரசு.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் EPC (Engineering, Procurement, and Construction) முறையில் திட்டத்தை வடிவமைக்கவும் கட்டவும் 'ஆர்பிபி இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ்' (RPP Infra Projects Limited) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. 112 முதல் 127 ஏக்கர் பரப்பளவில் ₹206 கோடி செலவில் 18 மாதங்களில் முதற்கட்டப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த சூழலில், தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விளக்கப்படி, இந்த விளையாட்டு நகரத்தை வெறும் பயிற்சி மையமாக மட்டுமின்றி, எதிர்காலத்தில் தேசிய மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games) போன்ற மிகப்பெரிய சர்வதேச போட்டிகளை நடத்தும் அளவிற்குப் விரிவுபடுத்தவும், நவீன உள்கட்டமைப்புகளுடன் முழுமையாக மறுசீரமைப்பு (Restructure & Redesign) செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக வண்டலூர், குண்டம்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, போக்குவரத்து இணைப்பு வசதிகள் மற்றும் நிலம் இருப்பு அடிப்படையில் செம்மஞ்சேரி இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டு நகரம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு நீர் விளையாட்டு வசதிகள் , தரைவழி விளையாட்டுக்கள் , சர்வதேச தரத்திலான ஃபிஃபா (FIFA) கால்பந்து மைதானம், தடகளப் பாதைகள், லான் டென்னிஸ், துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை மற்றும் ஸ்கேட்டிங் வசதிகள் , உள்விளையாட்டு அரங்கங்கள் மற்றும் தற்காப்புக் கலைகளுக்கான அதிநவீனப் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் அமையவிருந்தது.
எனினும் இத்திட்டத்தால் சென்னைக்கு ஏற்படும் வெள்ள அபாயங்கள் குறித்த சுற்றுச்சூழல் கவலைகள் எழுந்ததால், கிண்டி ரேஸ் கோர்ஸ் (Guindy Race Course) மைதானத்தை இதற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'உவக்கை ஆராய்ச்சி அறக்கட்டளை' (Uvakai Research Foundation) வெளியிட்ட அறிக்கையின்படி, முன்மொழியப்பட்ட நிலப்பரப்பானது பள்ளிக்கரணை சதுப்புநில வடிகால் அமைப்பின் ஒரு பகுதியாகும்.
170.92 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் மழைநீரைத் தாங்கும் இயற்கை வடிகாலாக இது செயல்படுவதால், இங்கு கட்டடம் அமைத்தால் பருவமழைக் காலத்தில் சுற்றியுள்ள 1.24 லட்சம் குடியிருப்பாளர்கள் கடுமையான வெள்ள அபாயத்திற்குள்ளாவார்கள் என எச்சரிக்கப்பட்டது.சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சென்னையின் மையப்பகுதியில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் (Guindy Race Course) மைதானத்தை இந்த விளையாட்டு நகரத் திட்டத்திற்கு மாற்று இடமாகப் பயன்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன.
நிலப்பரப்பாகவும், வடிகால் பாதையாகவும் செயல்படுகிறது என்றும் முன் வந்த செய்திக் குறிப்புகள் கூறியுள்ளது.
SDAT-ன் விளக்கப்படி இந்தத் திட்டத்தை முழுமையாக மறுசீரமைத்து, புதிய வடிவமைப்பில் பெரிய அளவில் உருவாக்க முடிவு செய்யப்பட்டதால் பழைய பணி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்த ரத்து குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
குறிப்பாக அதிக பரப்பளவில்,பல்வேறு விளையாட்டு வசதிகளுடன்,தேசிய மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற மிகப் பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் வகையில், இந்த விளையாட்டு நகரத் திட்டத்தை மறுவடிவமைப்பு (Restructure and Redesign) செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதைய தகவலின்படி, பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, திட்டத்தை பெரிய அளவில் மறுவடிவமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் மேலும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இத்திட்டத்தை மறு சீராய்வு மூலம் செயலுக்கு கொண்டு வர தற்போதுள்ள அரசு முன்னெடுத்து வருகிறது.
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக 'ஆர்பிபி இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ்' நிறுவனம் பங்குச் சந்தைகளுக்கு (Stock Exchanges) அறிக்கை அளித்துள்ளது. அதில், திட்டத்திற்காக ஏற்கனவே முதற்கட்டப் பணிகள் தொடங்கி கணிசமான தொகையைச் செலவிட்டுள்ளதாகவும், ரத்தால் ஏற்படும் நிதி பாதிப்புகள் மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளன.
இந்த ரத்து நடவடிக்கை திட்டத்தை முடக்குவதற்காக அல்ல என்றும், சென்னை வாழ் மக்களுக்கு வெள்ளப் பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில், மிகப்பரிய சர்வதேச விளையாட்டு வளாகமாக இத்திட்டத்தை உயர்த்தி புதிய வடிவமைப்புடன் விரைவில் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்திட்டம் புதிய பொலிவுடன் செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழ்நாடு சர்வதேச விளையாட்டு வரைபடத்தில் முக்கிய இடத்தைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.