நாங்கள் யாரிடம் கூட்டணி பேசினாலும் டெல்லியில் இருந்து அவர்களை தூக்கி விடுகிறார்கள் – செங்கோட்டையன்..!

Sengottaiyan
Sengottaiyan
Published on

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொடரும் கட்சித் தாவல்கள் , எதிர்பாராத திடீர் தலைவர்கள் சந்திப்பு ஆகியவை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின்  உயர்நிலை நிர்வாகக் குழுத் தலைவருமான செங்கோட்டையன், இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். பரபரப்பான அரசியல் சூழலில் செங்கோட்டையனின் இந்த பேட்டி தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் கூட்டணி குறித்த நடவடிக்கைகள் , செயல்பாடுகள் அனைத்தையும் செங்கோட்டையனே செயல்படுத்துகிறார். விஜய் தலைமையிலான கூட்டணியில் , அமமுக தலைவர் டிடிவி தினகரன் , அதிருப்தி அதிமுகவை சேர்ந்த  ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரும் இணைவார்கள் என்று கூறப்பட்ட நிலையில்,  தற்போது யாரும் இணையவில்லையே என்று கேட்கப்பட்டது.  

அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், நீண்ட காலமாகவே விஜய்க்கு ஆதரவாக தினகரன் பேசி வந்தார். தவெக.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி. தினகரன் மிகவும் விரும்பினார். தினகரனை தொடர்ந்து மற்றவர்களும் எங்களுடன் கூட்டணி சேரத்தான் ஆர்வமாக இருந்தனர். இது தொடர்பாக பல முறை பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தது. ஆனால், சூழ்நிலை காரணமாக டி.டி.வி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். அவர் இணைந்தது அவரது தனிப்பட்ட முடிவாகும் , அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.

நாங்கள் யாரிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் , உடனடியாக டெல்லியில் இருந்து வந்து அவர்களை அந்தக் கூட்டணிக்கு கொண்டு சென்று விடுகிறார்கள். என்ன பிரச்சனை என்பது என்பது எங்களுக்கு தான் தெரியும் , அதை நான் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. வெளிப்படையாக நாங்கள் யாரிடம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பதை ரகசியமாக வைக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

இதன் காரணமாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை இப்போதே வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருப்பது தான் கட்சிக்கு நல்லது, என்று மறைமுகமாக அரசியல் சூழலைப் பற்றி கூறினார். தினகரன் மற்றும்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களுடன் கூட்டணி வைக்காததன் காரணம் மேலிட அழுத்தங்களே என்று மறைமுகமாக பேசியுள்ளார்.

அண்ணாவை அதிமுக மறந்துவிட்டது என விஜய் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் " திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணாவை மறந்து விட்டனர். கட்சியின் பொது நிகழ்ச்சிகளில் அண்ணா, எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா ஆகியோர் படங்களை புறக்கணித்து விட்டு , ஒருவர் படத்தை மட்டும் போட்டு முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். கட்சியை வளர்த்த தலைவர்களை மறந்து விட்டு , வேறு ஒருவரை உருவாக்குவது இயலாத காரியம். நாம் யாரால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறந்து விடக் கூடாது.  

நான் அதிமுகவில் இருந்து வேறு கட்சியில் இணைந்தாலும் எனது சட்டைப்பையில்  எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா படம் இருக்கிறது.இவர்களை என்னால் மறக்க முடியாது. நான் இவர்களை எனது சட்டைப்பையில் வைத்துக்கொள்ள தவெக என்னை அனுமதித்துள்ளது. இங்கு ஜனநாயகம் இருக்கிறது , அதனால் தான் நான் வெளியில் வந்தேன் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
ஓடிடியில் வெளியாகும் கார்த்தியின் வா வாத்தியார்..!
Sengottaiyan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com