

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாரின் ஜாமீன் மனுக்கள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் வழங்கக்கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர இருக்கிறது. அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாகக் கூறி, விசாரணையை பிற்பகல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைத்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையை பிற்பகல் 3:30 மணிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கு ரூபாய் 35 கோடி தருவதாக சிலர் தன்னிடம் குதிரை பேரம் நடத்தியதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கைப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் யூ-டியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பேரத்திற்கு திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வி. செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக்குமார் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததால், இந்த விவகாரம் விசாரணையில் தெரிய வந்ததும் போலீசார் உடனடியாக சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அவருடைய சகோதரர் அசோக்குமாரையும் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லூக்- அவுட்' நோட்டீஸ் கொடுத்து போலீஸார் உஷார் படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் முன் ஜாமீன் கோரி செவ்வாய்க்கிழமை அன்று மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் ஆளும் கட்சி தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூட தன்னுடைய பெயர் இடம்பெறவில்லை என்றும், இது அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
எனவே இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இதே வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக்குமார் இருவரது முன் ஜாமீன் மனுக்களும் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் நேரில் ஆஜர் ஆவார்களா? தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சியில் ஈடுபட்டார்களா? விசாரணையில் இருவரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்ற பல கேள்விகளும் இதற்கெல்லாம் செந்தில் பாலாஜி என்ன பதிலளிப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.