அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான இரண்டாவது கட்ட விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு தரப்பின் சார்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதம், குற்றம் சாட்டப்பட்டதற்காக மட்டும் ஒரு நபரை பதவியில் இருந்து நீக்கம் செய்து விட முடியாது. நாட்டில் இதுபோன்ற நிகழ்வு முதல் நிகழ்வு அல்ல.
செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் காரணத்தால் அவர் பொறுப்பு வகித்த துறைகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இலாகா இல்லாத அமைச்சராகவே நீடித்து வருகிறார்.
குடியரசுத் தலைவரோ, மாநில ஆளுநர்களோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்பட முடியாது. அரசினுடைய முன்மொழிவின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறியிருக்கிறது. இந்த நிலையில் ஆளுநர் தனது அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக செயல்படுகிறார்.
மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைச் சென்றால் மட்டும் தான் பதவியில் நீடிக்க முடியாத என்று சட்டம் விரிவாக சொல்லி இருக்கிறது. ஆனால் மனுதாரர்கள் அரசியல் நோக்கத்திற்காக இது போன்ற வழக்குகளை தொடர்ந்து உள்ளனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் எம்எல்ஏவாக இருப்பதற்கும், அமைச்சராக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சிறையில் இருப்பவர் எப்படி அமைச்சரவை கூட்டத்தின் பங்கேற்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் இருதரப்பையும் எழுத்துப்பூர்வமான வாதங்களை முன்வைக்க சொல்லி வழக்கை ஒத்தி வைத்தனர்.