

காவல்துறையினர் தங்களை துன்புறுத்தக் கூடாது என்று கூறி ,சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் செந்தில்குமார் சார்பாக மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில் காவல்துறையினர் தங்களை துன்புறுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. முன் ஜாமீன் பெற்று இதுவரை சரணடையாத நிலையில், துன்புறுத்தக் கூடாது என்று எவ்வாறு கூற முடியும ? என்று நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை, அவரது கட்சியில் இருந்து விலகி தங்களது கட்சிக்கு இழுக்க, குதிரை பேரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்சி கலைப்பு சதி விவகாரம் என்பதால், இந்த விவகாரம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த விவகாரத்தில் மிக முக்கியமாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாரின் தலையீடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் மீதும் உடனடியாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தனர். அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் அளித்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையின்படி தினசரி திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், முன்ஜாமின் கிடைத்தும் கூட இதுவரை செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.
இந்தச் சூழலில் , செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் "நாங்கள் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றுள்ளோம். ஆனாலும் ,வேறு எந்த வழக்குகளிலும் எங்களை காவல் துறையினர் துன்புறுத்தும் வாய்ப்பு உள்ளது. கைது செய்யக்கூடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. அதனால் வேறு ஏதேனும் வழக்கில் காவல்துறையினர் எங்களை துன்புறுத்தக் கூடாது" என்று கூறி வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை கூறும் மனுவாக இது இருப்பதினால் , இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு கால அவகாசம் தேவை " என்று வாதிட்டுள்ளார்.
அப்போது செந்தில் பாலாஜி வழக்கறிஞர், "முன் ஜாமின் பெற்றுள்ள செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரை வேறு வழக்கில் கைது செய்து துன்புறுத்தக் கூடாது. மற்றபடி அவர் மின்சாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்" என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி "மனுதாரர்களுக்கு ஏற்கனவே முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை அவர்கள் சரணடையவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் கூட முன்ஜாமின் பெற நேரில் வராமல் உள்ளார். இவர் சரணடையாத நிலையில், எவ்வாறு காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என்று கோர முடியும் ? மற்ற வழக்குகளிலும் முன்கூட்டியே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் தற்போது எந்த உத்தரவையும் கோர முடியாது! என்று கூறிய நீதிபதி, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.