செந்தில் பாலாஜிக்கு நாளை பைபாஸ் அறுவை சிகிச்சை - தள்ளிப்போகும் அமலாக்கத்துறையின் விசாரணை!

செந்தில் பாலாஜிக்கு நாளை பைபாஸ் அறுவை சிகிச்சை - தள்ளிப்போகும் அமலாக்கத்துறையின் விசாரணை!
Published on

ஐந்து நாட்கள் ஆகியும் விசாரணை நடத்த முடியாது சூழலில், நாளை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதால் அமலாக்கத்துறையின் விசாரணை கேள்விக்குறியாகியிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் அமலாக்கத்துறை விசாரணை தொடர வாய்ப்பில்லை என்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நலக்குறைவின் காரணமாக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை காலை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை மருத்துவர்கள் செய்து வருவதாகவும் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் செந்தில் பாலாஜியை சில நாட்கள் நன்றாக ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்படும். எட்டு நாட்கள் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களில் நடத்த முடியவில்லை. இனி காவலில் விசாரணை நடத்துவது என்பது சாத்தியமில்லாமல் ஆகியிருக்கிறது.

5 நாட்கள் ஆகியும் ஒரு நாள் கூட அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. வருகிற 23-ந்தேதி மாலை 3 மணிக்கு செந்தில் பாலாஜியை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அமலாக்கத்துறை காவல் முடிவடைய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு நாளை காலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதால் விசாரணையை தொடங்காமலேயே காவலை முடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறையினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. நாளை காலை 10 மணிக்கு பிறகே மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பியும் 2-வது முறையாக ஆஜராகவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தரப்பு தொடர்ந்து கால அவகாசமும் கோரி வருகிறது. தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com