செந்தில் பாலாஜி கைதை உறுதி செய்தது சரியே... மூன்றாவது நீதிபதி உத்தரவு!

செந்தில் பாலாஜி கைதை உறுதி செய்தது சரியே... மூன்றாவது நீதிபதி உத்தரவு!
Published on

திமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்குவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பெற்றதாக, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தது.

அதன் பிறகு அரசியல் மாற்றங்கள் ஏற்பட செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமானார். இந்த நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.அப்போது நேரில் சென்று நீதிபதி அல்லி விசாரித்து செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக ஜூலை 12 தேதி இரண்டாவது முறையாக மேலும் 14 நாட்களுக்கு காவல் நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது.

அதேநேரம் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இரண்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இவர் வழக்கை முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகினார். அமலாக்கத்துறை எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. இந்த கைது சட்டவிரோதம். அமலாக்கத் துறைக்கு விசாரணை நடத்த மட்டுமே அனுமதி இருக்கிறது, புலனாய்வு விசாரணை நடத்த அனுமதி கிடையாது. அதற்காக நீதிமன்ற உத்தரவு உள்ளது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ள செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை கூடுதல் நெருக்கடியை உள்ளாக வாய்ப்புள்ளது என்று பல்வேறு வாதங்களை முன் வைத்தார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, அமலாக்கத் துறைக்கு புலன் விசாரணை நடத்த அனுமதி உள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் முதல் கட்ட முகாந்திரம் உள்ளதால் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்படுபவர் இதய பிரச்சினை இருப்பதாக கூறுவது வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது என்று வாதிட்டார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.வி. கார்த்திகேயன், நீதிபதி பரதன்சக்கரவர்த்தியின் கருத்துக்கு உடன்படுவதாகவும், செந்தில் பாலாஜி சட்டத்தை மதிக்க வேண்டும், விசாரணைக்கு உட்பட்டு குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கட்டும், கைது சட்டப்பூர்வமானதுதான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். இதன்மூலம் செந்தில் பாலாஜி கைது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com