தமிழ்நாட்டில் உள்ள 32 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கருக்கலைப்பிற்கு அதிக அளவிலான விண்ணப்பங்கள் வருகின்றது. மேலும் ஒன்றிய அரசு கருக்கலைப்புகளை முறையாக விசாரிப்பதற்கும், உரிய காரணங்கள் இருந்தால் மட்டும் கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றது. மேலும் கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு மாநிலங்களும் தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கருகளைப்பிற்கு அதிக அளவிலான விண்ணப்பங்கள் வருவதாக கூறப்படுகிறது. இதனால் விண்ணப்பங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி பதில் அளிப்பதற்கும், கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்குவதற்கும் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 32 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கருக்கலைப்பிற்கு தனி வாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த ஆணையில், கருக்கலைப்பு சட்ட முறைப்படி உரிய காரணங்களை கொண்டு விண்ணப்பிக்கும் நபர்களை பரிசோதனை செய்து, சிசுக்களை பரிசோதனை செய்து, சரியான காரணம் இருக்கும் பட்சத்தில் கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்க மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பொதுநல மருத்துவர், மகப்பேறு பெண்கள் நலன், பச்சிளம் குழந்தைகள் நலன், கதிரியக்க குழந்தைகள் நலன் போன்ற பல்வேறு துறைகளின் மருத்துவர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும், பெறப்படும் மனுக்கள் மீது மூன்று நாட்களில் விசாரணை நடத்தி, பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான காரணங்கள் இல்லாத விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கும் இந்த வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.