இந்தியாவில் கல்வி பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தனி இணையதள வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தியா உயர்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதனால் இந்தியாவில் கல்வி பயில்பவர்களும், இந்தியாவில் கல்வி பயில வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு வகையான பாடப் பிரிவுகள், போதிய இட வாய்ப்புகள், வளரும் நாடுகளில் உள்ள மாணவர்களை இந்தியாவை நோக்கி வருவதற்கான காரணத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், ஆராய்ச்சி படிப்புக்காக எண்ணற்ற மாணவர்கள் இந்தியாவை நோக்கி வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ‘இந்தியாவில் கல்வி’ எஸ்ஐஐ என்ற புதிய இணையதள சேவையை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுடைய பாதுகாப்பு, போக்குவரத்து, பயணம் மற்றும் தகவல்கள் ஆகியவை எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள சேவையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்துப் பேசிய ஜெய்சங்கர், ‘இதன் மூலம் பல்வேறு குடும்பப் பின்னணியை கொண்ட மாணவர்களும் இந்தியாவில் உயர் கல்வி பெற எளிதாக வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் உயர் கல்வித்துறை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், இதன் மூலம் இந்தியாவில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்தவும், விண்ணப்பப் பதிவு, நுழைவு இணைப்பு, விசா மற்றும் பல்வேறு தகவல்களும் கிடைக்கும்’ என்றும் கூறினார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுபற்றி பேசியபோது, ‘தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மாற்றத்தின் அடிப்படையில் இந்த செயலி தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் உயர் கல்வி வாய்ப்பு கூடுதல் அடையும். சர்வதேச அரங்கில் கல்வி தரத்தில் இந்தியாவின் உயர் கல்வித் துறை உச்சத்தை எட்டும். மேலும், ஆராய்ச்சி கல்விக்கான மாணவர்களை இந்தியா பல்வேறு உலக நாடுகளில் இருந்து அதிகம் கவரும்’ என்று கூறினார்.