ரவுடிகளுக்கு எதிராகவும் கள்ளச்சாராயத்திற்கு எதிராகவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் - சங்கர் ஜிவால்!

 சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்
Published on

தமிழகத்தில் இனி ரவுடிகளுக்கு எதிராகவும், கள்ளச் சாராயத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்ற சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூன் 22- ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவாலை, தமிழ்நாட்டின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழ்நாடு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ” தமிழ்நாட்டின் காவல்துறை டிஜிபியாக பொறுப்பேற்கிறேன். முதலமைச்சருக்கு நன்றி. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. அதனை மேலும் மேம்படுத்த முயற்சி செய்வேன். காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்த பாடுபடுவேன். காவல் துறையினருக்கு விடுமுறை, நலன் போன்றவைக்கு கூடுதல் கவனம் செலுத்துவேன். சென்னை காவல் துறையில் செயல் படுத்திய திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல் படுத்துவேன்.

தமிழ்நாடு காவல்துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப் பட உள்ளன. காவல்துறையில் போதுமான காவலர்கள் நியமிக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை கூடிய விரைவில் எடுக்கப்படும். பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சாலையில் நிகழும் வாகன விபத்து மரணங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் புதிய தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்படும். ரவுடிகளுக்கு எதிராகவும், கள்ளச் சாராயத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com