தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் சமூகப் பாதுகாப்புத் துறை அரசினர் பாதுகாப்பு இடம் வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில் அமைந்துள்ளது. இந்தப் பாதுகாப்பு இடத்தில் 16 வயது முதல் 21 வயது வரை உள்ள குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சிறார்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தப் பாதுகாப்பு மையத்திலிருந்து நேற்று இரவு ஏழு சிறார் கைதிகள் கழிவறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து, அவர்களின் போர்வையையே கயிறாகப் பயன்படுத்தி ஒருவர் மீது ஒருவர் ஏறி தப்பிச் சென்று இருக்கிறார்கள். இதை அறிந்த அந்த மையத்தின் பாதுகாவலர்கள் மற்றும் காவல் துறையினர் தப்பி ஓடிய சிறார் கைதிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் இரண்டு பேர் பெருமுகை என்ற இடத்தில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். தப்பி ஓடிய மீதமுள்ள ஐந்து சிறார் கைதிகளை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். சென்ற இரண்டு மாதங்களில் மட்டும் இதுபோன்று சிறார் கைதிகள் தப்பி ஓடும் சம்பவம் மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை சிறார் கைதிகள் தப்பி ஓடியபோதும் காவல் துறையினர் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, அவர்களை மீண்டும் அந்தப் பாதுகாப்பு இடத்திலேயே அடைத்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.