கோவை இளைஞர் சீனிவாசனால் உயிர்பெற்ற ஏழு பேர்

கோவை இளைஞர் சீனிவாசனால் உயிர்பெற்ற ஏழு பேர்

லகில் ஒரு சிலர்தான் இறைவனடி சேர்ந்த பிறகும் மக்களின் இதயங்களில் வாழ்வார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்தான் நடைபெற்றுள்ளது. கோவையை சேர்ந்த 25 வயதான இளைஞர் சீனிவாசன் விபத்து ஒன்றில் மூளை சாவு அடைந்த நிலையில், அவரின் உடல் உறுப்புக்கள் தானத்தினால் ஏழு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சீனிவாசன் கோவையில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவிநாசி சாலை தொட்டிப்பாளையம் பிரிவு அருகே ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அவருக்கு  அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கே எம் சி ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் மே ஒன்பதாம் தேதி மூளைசாவு அடைந்தார். இதை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி சீனிவாசனின் பெற்றோர் இளமுருகன், கனகவல்லி ஆகியோர் மகனின் இறப்பினால் துவண்டு போயிருந்தாலும், அவரின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர். அப்படியாவது தங்களுடைய மகன் யாரோ ஒருவர் மூலம் உயிர் வாழ்ந்துக்கொண்டிருப்பான் என்பதுதான் அவர்களின் ஒரே ஆறுதல்.

இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட மருத்துவர்களால் சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன. இதில் கல்லீரல் ஒரு சிறுநீரகம் கே எம் சி ஹெச் மருத்துவமனைக்கும் இதயம் ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் ஏழு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெறும் 25 வயது இளைஞரான சீனிவாசன், உடல் உறுப்புகள் தானம் செய்ததன் மூலம் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்ததுடன் இறந்தும் மக்களின் இதயங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையல்ல.

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com