
தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியேறும்போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. அவற்றை 'காற்று மாசுபடுத்திகள்' என்று அழைக்கின்றனர். எரிபொருள்கள் எரிப்பு அல்லது கழிவுகளை திறந்தவெளியில் எரித்தல், விவசாய பொருட்களை எரித்தல் போன்ற பல்வேறு மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் வாயுக்கள் மற்றும் துகள்களால் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த காற்றுமாசுபாடு துகள்களில் நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு ஆகியவை அதிகளவு உள்ளது. காற்று மாசுபாடு தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
காற்று மாசுபாட்டால் சுவாச தொற்று, ஆஸ்துமா, ஒவ்வாமை, சைனஸ்கள், நுரையீரல் தொற்று, இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் எம்பிஸிமா போன்ற பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படும். காற்று மாசுபாட்டின் குறுகிய கால மற்றும் நீண்ட கால வெளிப்பாடுகள் ஆரோக்கிய பாதிப்புகளுடன் தொடர்புடையவை. WHO, ஒவ்வொரு ஆண்டும், ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாடு தொடர்பான சிக்கல்களால் உயிரிழப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. கால நிலை மாற்றத்தால் வெயில் காலத்தில் அதிக வெயிலும், மழைக்காலத்தில் அதிகனமழை மற்றும் புயலாலும் பல்வேறு நாடுகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. மேலும் காற்று மாசுபாட்டால் உலகம் வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, அதீத கனமழை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
உதாரணமாக அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ, பனிப்புயல் போன்றவை காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்டன என்றே சொல்ல வேண்டும். மேலும் பல்வேறு உலக நாடுகளில் ஆங்காங்கே காட்டுத்தீயும் எரிந்து வருவதால் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.
அந்தவகையில் தாய்லாந்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக Air Quality Index (IQAir) தெரிவித்துள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் பாங்காக் நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக IQAir தெரிவித்துள்ளது.
அங்கு வசிப்பவர்கள் மோசமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மோசமான காற்றில் திணறியதால் பாங்காக்கில் உள்ள 350 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் விவசாய கழிவுகளை எரிக்கவும், கனரக வாகனங்களை ஓட்டுவதற்கும் தாய்லாந்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது; மீறினால் கைது செய்யப்படுவார்கள் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து காற்று மாசுபாட்டை குறைக்க அடுத்த ஒரு வாரத்துக்கு பஸ், ரெயில் போன்றவற்றில் இலவசமாக பயணம் செய்ய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.