தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், மிழகம், புதுவை காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி இருக்கிறது. அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். அது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 25 ஆம் தேதி தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்கள் அக்டோபர் 25 ஆம் தேதி வரை அரபிக் கடல் பகுதிக்கும், அக்டோபர் 26 ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்கள் கரை திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.